இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Friday 20 June 2014

ஓட்டை விட்டெறி - II



     கோன்கி என்ற முனிகுமாரன் தான் பிறந்த காலம் தொட்டு காட்டில் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். அவர் பிறந்த போதே அவரது தாயாரும் காலமாகி விட்டாதால் தன் தந்தை மற்றும் அவரது சீடர்களைத் தவிர வேறு யாரையும் அவன் பார்த்ததில்லை.
     தன் மகன் தக்க பருவம் எய்தி நான்மறையும் நன்கு கற்று தேர்ந்தபின் அவன் உலக அனுபவமும் பெற்றால் தான் அவனுது ஞானம் முழுமை எய்தும் என்று எண்ணிய முனிவர் மகனை அழைத்து அவனது கையில் ஒரு திருஓட்டையும் தந்து பக்கத்து நாட்டிற்க்குச் சென்று சிறுது காலம் வாழ்ந்து விட்டு வருமாறு கூறினார்.

     'அது சரி, அதற்கு எதற்கு இந்த திருஒடு என்று கேட்ட மகனிற்கு, 'நாட்டில் உணவை யாசித்துப் பெற பாத்திரம் ஒன்று தேவைப்படும். அதற்கே இந்தத் திருஓடு!' - என விளக்கம் கூறி அனுப்பினார்.

     காட்டைக் கடந்து நாட்டிற்குள் நுழைந்த இளம் துறவி 'கோன்கி' ராஜவீதிகளில் நடந்து செல்லும் போது எதிரே வந்த ஒரு பெண்ணைக் கண்டு வியப்புற்றார். அப்படி ஒரு உருவத்தை இதுவரை அவர் கண்டதே இல்லை. எனவே அப்பெண்ணின் அருகே சென்று 'வித்தியாசமான உருவத்துடன் காணப்படும் தாங்கள் யார்?' என்று பணிவுடன் கேட்டார்.

     அக்காலப் பெண்கள் ஒருவனைக் கண்ட மாத்திரத்தில் அவனை எடைபோட்டு உணரும் அளவிற்கு பலவித கல்வி கேள்விகளில் சிறந்து  விளங்கியவர்கள். எனவே, அவள் கோன்கியைப் பார்த்ததும் அவனது கள்ளமற்ற உள்ளத்தை உணர்ந்தவளாய், 'ஐயா, நான் ஒரு பெண். இறைவன் படைப்பில் ஆண், பெண் என்ற இரு நிலைகள் உள்ளன. அதில் தாங்கள் ஆண் என்ற நிலையினர். நான் பெண் என்ற நிலையினள்!'  என்றாள். எனினும் கோன்கியின் வியப்பு குறையவில்லை. 'அதெல்லாம் சரி, ஆனால் என் மார்பு அகன்று விரிந்து ஒரே சம அளவில் இருக்கிறது. ஆனால் தங்கள் மார்பு மட்டும் அப்படி அல்லாமல் இரண்டு புறமும் வீங்கி புடைத்து உள்ளனவே. அது ஏன்?' என்று கேட்டார்.

     அப்பெண் அத்துறவியின் நிர்மலமான உள்ளத்தை உணர்ந்தவளாதலின் சிறிதும் சினம் கொள்ளாமல் மிகப் பொறுமையுடன், 'துறவியே, பெண்களாகிய நாங்கள் குழந்தை பெறும் தகுதிபடைத்தவர்கள். பிற்காலத்தில் என் போன்ற பெண்களுக்குப் பிறக்குப் போகும் குழந்தைகள் பசியாறப்பால் பருக வேண்டுமே என்று இறைவன் படைத்த கிண்ணங்களே இந்த வீக்கங்கள்!' என்று கூறினார்.

     அவளது கூற்று துறவியைச் சிந்திக்க வைத்தது. எப்போதோ பிறக்கப் போகும் குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போது அதற்குரிய பாத்திரங்களை உருவாக்கி வைத்த இறைவன்  - இப்போது வாழும் எனக்கு உணவை எங்கேனும் உருவாக்கி வைத்திருக்க மாட்டாரா? அப்படி இருந்தும் அந்த இறைவன் மீது நம்பிக்கை இன்றி இந்த திருஒட்டை சுமந்து திரிகிறேனே!' என்று மனதிற்குள் மருகிய கோன்கி தன் கையில் இருந்த திருஒட்டை விட்டெறிந்து விட்டு எதிரே இருந்த கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

1 comment:

  1. ஞானத் திறவுகோல்
    எங்கு யார் மூலம் எப்படிக் கிடைக்கும் என்பதை
    யாரோ அறிய வல்லார்

    ReplyDelete