இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 29 June 2014

அலைச்சல்

காலையில் இருந்து ஒரே அலைச்சல் தான்.அதுவும் இந்த வயதான காலத்தில் உடம்பு தாங்க வேண்டுமே|

என்னைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே!! எழுபத்து மூன்று வயதான கிழவன்----இளையோர் மொழியில் ‘பெரிசு’. இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து போஸ் ஹாஸ்பிடலில் ICU விலும் ஒரு முறை சென்னை லைப் லயனில் ICU வியிலும் படுத்திருந்து பிழைத்து வந்தவன்.

தெரிந்த கதை தானே விஷயத்துக்குவா என்கிறீர்களா? இதோ வந்தேன்.

காலையில் கரண்டு பில் கட்டிவிட்டு மருத்துவரைப் பார்க்கப் போனேனா – டாக்டர் ஊருக்குப் போய்விட்டார் வர ஐந்து நாளாகும் என்றார்கள். 

இவர் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட். கீழே விழுந்து கொஞ்சம் இடுப்பில் பிராக்சர் – அவர் தான் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து மருந்தும் கொடுத்து பெல்ட்டும் போட்டு விட்டார்.

சரி என்று பஸ் ஏறி வீடு வந்தேனா? தொடர்ந்து அடுத்த வேளை ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். இல்லை, இல்லை பிரச்சனை என்னை சிக்க வைத்து விட்டது.

விஷயம் என்னவென்றால் என் இந்த மாத பென்ஷன் பணத்தில் இருந்து மருத்துவச் செலவுக்கும், குடும்பச் செலவுக்கும் ஒரு இருபதாயிரம் எடுக்கப் போனால் பணம் இல்லை என்றார்கள்.’நன்றாகப் பாருங்கள் முப்பத்தேழாயிரம் பக்கம் இருக்கும்’ என்றேன். அதற்கு,’ காஷியர் மொதல்ல பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுப் பாருங்கள்’-- என்று கூலாகச் சொல்லி அனுப்பவும், நானும் பிரிண்டர் உள்ள கவுண்டரில் போய் கியூவில் நின்று… நின்று.. ரொம்ப நேரம் நின்று… என்ட்ரி போட்டுப் பார்த்தால் பதினேழாயிரத்துச் சொச்சம் போன வாரம் எடுக்கப்பட்டுள்ளது.

எப்படி??

நான் எடுக்கவில்லையே!! வங்கி அலுவலரிடம் சென்று முறையிட்டேன். என்னுள்ளும் ஒரு சந்தேகம் லேசாக இருந்தது. போன மாதம் ஒரு பதினேழாயிரத்துச் சொச்சம் என் பென்ஷனாக வரவாகி இருந்தது. எனக்கு அவ்வளவு வராதே. பத்தாயிரத்துச் சொச்சம் தானே என் பென்ஷன் என்று காஷியரிடம் அப்போதே கூறி கொஞ்சம் சரி பாருங்கள் என்றும் வேண்டுகோள் விட்டேன். ஆனால் அந்த மகானுபவரோ ‘இல்லை, இல்லை, இந்த மாதம் வந்த உங்கள் பென்ஷன் தொகை இது தான். ஏதாவது அரியர் சேர்ந்து வந்திருக்கும்’ என்று சொல்லி விட்டார். நானும் அப்போது வீட்டுச் செலவுக்கு ஒரு ஐந்தாயிரம் மட்டும் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன்.

      அது தான் நான் செய்த தப்போ?

இப்போது என்னடாவென்றால் திடீர் என்று பதினேழாயிரத்துச் சொச்சம் மாயமாகி விட்டதே.

வங்கி அலுவலரும் எனக்காக மெனக்கெட்டு கம்யூட்டர் பட்டன்களை டொக்கு டொக்கு என்று டொக்கியும் மௌஸை அப்படியும் இப்படியும் நகர்த்தியும் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘சார்! அந்த பதினேழாயிரத்துச் சொச்சம் ராஜேஸ்வரனுடையது. டிரஸரியில் இருந்து அதை அவர் பெயருக்கு மாற்றிவிடுமாறு கடிதம் வந்ததால் மாற்றி விட்டோம் என்று சர்வசாதரணமாகச் சொன்னதும் எனக்கோ—

எரிச்சலோ எரிச்சல்!                             

அட, அப்படித்தான் மாற்றுவதாக இருந்தாலும் எனக்கு ஒரு தகவல் – செல்போனில் ஒரு வார்த்தை தெரிவித்திருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்திருந்தால் நான் இப்படி பணம் எடுக்க வந்து ஏமாந்திருக்க மாட்டேனே?

        ‘சரி, அப்படியானால் என் ஜனவரி பென்ஷனாவது வந்திருக்க வேண்டுமே’ என்று நான் வங்கி அலுவலரிடம் வினவியதும்! அப்படி எதுவும் வரவில்லை. இது பற்றி நீங்கள் டிரஸரியில் போய்த் தான் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டார். என்ன செய்வது! யாரோ செய்த ஒரு சிறு பிழையால் வயதான காலத்தில் இப்படி ஒரு அலைச்சல்.

மறுநாளே இரண்டு பஸ் மாறி ஆட்சியர் அலுவலகம் சென்று கருவூலப் பகுதியில் நுழைந்து சம்பந்தப்பட்ட எழுத்தரைத் தேடினால் அவர் அன்று லீவில் இருப்பதாகக் கூறி மறுநாள் மதியம் மூன்று மணிக்கு வருமாறு சூப்ரண்ட் கூறினர்.

இதுதான்ய்யா நான் சிக்கிக் கொண்ட பிரச்சனை.

பிப்ரவரி மாத பென்ஷன் வந்து விட்டது. ஆனால் ஜனவரி மாத பென்ஷன் தான் (வேறு ஒருவருடையது வந்து அவருக்கே திருப்பப்பட்டது). இதை விளக்கி என் பென்ஷனை கேட்கத்தான் இதோ கிளம்பிக் கொண்டுருக்கிறேன்.

மணி மதியம் இரண்டரையாகி விட்டது. பேருந்து நிறுத்தத்தில் நான் வந்து நின்று ஒரு மணி நேரமாகப் போகிறது – இன்னும் பஸ் வரவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு பஸ் மாறி நான் எப்போ ஆட்சியர் அலுவலகம் சென்று சேருவது. இந்த நேரத்தில் - காசைப் பார்த்தால் காரியம் ஆகாதென்று துணிந்து போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினேன். அறுபது ரூபாய் கேட்டார். ஆட்டோ ஒட்டுநர். காசு பெரிசா? காரியம் பெரிசா? ஆட்டோவில் ஏறிப் பயணப்பட்டு கால்மணி நேரத்தில் – சரியாக மூன்று மணிக்கே கருவூல அலுவலகத்தில் நுழைந்தால் அங்கே எல்லா இருக்கைகளிலும் எல்லா அலுவலர்களும் அமர்ந்து கர்ம சிரத்தையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே சில எழுத்தர்களின் கேபின் முன் என் போன்ற பெரிசுகள் நின்று தங்கள் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் –---

என்னவென்று சொல்வது? எல்லாம் என் போதாத வேளை! என் பென்ஷன் சம்பந்தப்பட்ட அந்தக் குறிப்பிட்ட எழுத்தரை மட்டும் காணோம் !

சூப்ரண்ட் என்னைப் பார்த்ததுமே ‘நீங்க தானே நேத்து ஜனவரி பென்ஷன் விஷயமா வந்தீங்க?’ என்று என்னை அடையாளம் கண்டு கேட்டதுடன் அந்த அலுவலர் சாப்பிடப்போயிருக்கிறார். சற்று வெராண்டாவில் உட்கார்ந்திருங்கள். வந்து விடுவார்!’ என்றார்.

நானும் வராண்டாவில் வந்து உட்கார்ந்து…………….. உட்கார்ந்து…………………. காத்திருந்து………………………….. காத்திருந்து…………………………..

அப்பாடா! நான்கு மணிவாக்கில் அவரும் வந்து சேர்ந்தார்.

அவர் இருக்கையில் அமரும் வரை காத்திருந்து அவர் அமர்ந்ததும் அவர் முன் நின்று விஷயத்தை விலாவாரியாக விளக்கினேன்.

       ‘அப்படியா?’ என்ற வினாக்குறியை என் முன் நீட்டியவர், ‘அந்த பென்ஷன் பணம் யார் பெயருக்கு மாற்றப் பட்டிருக்கிறது என்பதாவது தெரியுமா?’ என்று கேட்டார்

       ‘தெரியும் ஐயா, வங்கியில் விசாரித்தேன். என்னுடன் பணியாற்றிய ராஜேஸ்வரன் என்பவர் பெயருக்கு மாற்றப் பட்டிருக்கிறது. அந்தப் பென்ஷன் தொகை அவருக்குரியது என்று இங்கிருந்து கடிதம் வந்ததால் அவர்கள் பணத்தை டிரான்ஸ்பர் செய்ததாகச் சொன்னார்கள்!’ -- என்று கூறிவிட்டு நானும் அவர்தம் கம்ப்யூட்டரில் லொட்டு லொட்டு என்று பட்டனை லொட்டியும் மௌஸை அங்கும் இங்கும் ஓட விட்டும் கண்டு பிடித்து என் பென்ஷனை வங்கிக்கு அனுப்பிவிடுவார் என்ற பெருத்த பேராசையுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ----

  அந்த மகானுபவரோ கம்ப்யூட்டர் பக்கமே தன் பார்வையை ஓட்டவிடாமல் பெரிய பெரிய லெட்ஜர்களை எடுத்துப் புரட்டியும், பைல்களை எடுத்து ஆராய்ந்தும், ‘ஆமாம்! ஜனவரி மாத பென்ஷன் லிஸ்ட்டில் உங்கள் பெயரையே காணோமே! அப்படியானால் உங்கள் பென்ஷன் தொகை வேறு யாருக்கு போயிருக்கும்?’ --- என்று அதிர்ச்சியூட்டும் கேள்வி ஒன்றை என் முன் தூக்கிப்போட்டார்.

      அதாவது, தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறாராம் அப்படி! ஒரு – ஒரு மணி நேரத்திற்கு மேல் என்னை நிற்க வைத்து பல லெட்ஜர் பைல்களை ஆராய்ந்து விட்டு, ‘எதற்கும் நீங்கள் நாளை மதியம் இதே நேரத்திற்கு வாருங்கள்! அதற்குள் நான் என்னவாயிற்று என்று பார்த்து வைக்கிறேன்!’ என்றார்.

      நானும் அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினேன். வேற வழி? மெல்ல நடந்து பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சிறிது நேரம் காத்திருந்தேன். அதிக களைப்பாக இருந்தது. அருகில் இருந்த விசாலம் காபி ஸ்டாலில் ஒரு ஸ்ட்ராங் டீ வாங்கிக் குடித்துமீண்டும் பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என் போதாத வேளை……………
வேறு என்ன சொல்ல?

எனக்குத் தேவையான பேருந்தைத்தவிர மற்றெல்லா பேருந்துகளும் வந்த வண்ணம் சென்ற வண்ணம் இருந்தன. எனக்கோ பயங்கர அலுப்பு. இடுப்பில் பெல்ட் போட்டிருந்தும் ரொம்ப நேரம் நின்றதாலோ என்னவோ கொஞ்சம் கொஞ்சம் வலி எடுக்க ஆரம்பித்தது.

வேறு வழி!

ஆட்டோவைப் பிடித்து அறுபது ரூபாய் செலவழித்து வீடு வந்து சேர்ந்தேன்.

       ‘அப்பாடா!’ என்று கொஞ்ச நேரம் கட்டிலில் உடலைக் கிடத்தினேன்.

                        *************


மறுநாள் மதியம் தவறாமல் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆட்சியர் அலுவலகம் சென்றேன். பணம் ஆயிற்றே! வயதானக் காலத்தில் தானே மருந்து மாத்திரை டாக்டர் என்று எனக்கும் என் மனைவிக்கும் ஆயிரக்கணக்கில் மாதந்தோறும் செலவிட வேண்டி உள்ளது.

எனக்கோ மகன் இல்லை. கடவுள் அந்தப் பிராப்தம் தராவிட்டாலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள். எங்கள் உயிரை உடம்புடன் ஒட்ட வைத்துக் கொள்ள இந்த பென்ஷன் தான் துணை. அதிலும் பிரச்சனை என்று வந்தால்.............. தெய்வம் தான் துணை----------

வேறு என்ன சொல்ல?

சரி, ஆட்சியர் அலுவலகம் சென்றேனா? என் துரதிஷ்டம் என்னை விடுவேனா என்றது. நான்தான் விருச்சிக ராசிக்காரனாயிற்றே! இப்போது நடப்பதும் ஏழரை நாட்டுச் சனியாயிற்றே!! விடுமா சனி!

ஆட்சியர் அலுவலகம் வெறிச் சோடிக் கிடந்தது. ‘என்னடா இது – உலக அதிசயம்?’ – என்று உள்ளே நுழைந்து விசாரித்தால், அன்று அதாவது இன்று தெலுங்கு வருடப்பிறப்பாம் – அரசு விடுமுறையாம். இது எனக்கும் நினைவில்லை. நேற்று வரச் சொன்ன எழுத்தருக்கும் நினைவிருந்திருக்காது – என்றாலும் அலைச்சலும் காசு நஷ்டமும் எனக்கே எனக்குத்தானே!

சனீ’ஸ்வரா! என்று வழியில் ஒரு சிவன் கோயிலுக்குள் நுழைந்து சனி பகவானுக்கு ஒரு கும்பிடு போட்டு எள் தீபம் ஏற்றி விட்டு வந்தேன்.

இனி அவர் கருணை காட்டினால் தான் உண்டு! இல்லை – இல்லை தான்!

அதற்கு மறுநாள் போகலாம் என்றால் அன்று காலையிலேயே ஊரில் இருந்து என் பெரிய மகள் – மாப்பிள்ளை வந்து விட்டார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து அளவளாவி பொழுது அப்படியே போய் விட்டது. அவர்கள் இங்கிருந்த இரண்டு நாள்களும் எங்கும் போக முடியவில்லை. வேறு பல ஜோலிகள்.

இப்படியே நான்கைந்து நாள்கள் கழிந்ததும் வந்த கிழமை சனி, ஞாயிறு. கருவூலம் விடுமுறையாக இருக்குமே என்று இப்படி ஒரு வாரத்தை பென்ஷன் நினைவிலேயே ஓட்டிவிட்டு அடுத்து வந்த திங்கட்கிழமை மதியம் ஆட்சியர் அலுவலகம் போய் அந்த எழுத்தர் முன் நின்றதும் அவர் என்னைப் பார்த்தார். பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். ‘வாங்கய்யா, வாங்க! எங்கே ஒரு வாரமா வரவேயில்லையே!’ – என்று அவர் கேட்டதும், ‘அப்பாடா’ நம் வேலை முடிந்திருக்கும் போல் இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்து சென்றதைக் கூறி வர முடியாமற் போன காரணத்தைச் சொல்லி தொடர்ந்து, ‘என் ஜனவரி மாத பென்ஷன்?’ என்ற கேள்விக்குறியை அவர் முன் நீட்டினேன். மனுசன் அசருவதாக இல்லை.

      ‘அதைத்தானே நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். சீக்கிரம் கண்டுபிடித்து விடுவேன்! ஒன்று செய்யுங்கள். நீங்கள் பாவம் இந்த வயசான காலத்தில் இந்த வேகாத வெயிலில் அலைந்து கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மொபைல் நம்பரைக் கொடுத்து விட்டுப் போங்கள். கண்டு பிடித்து சரி செய்ததும் உங்களுக்கு போன் செய்து தெரிவிக்கிறேன்!‘ என்றார்.

           என்ன செய்வது? நம்பியாரைப் போல் கையைப் பிசைவதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. என் செல்போன் நம்பரைக் கொடுத்து விட்டு, ‘ஐயா, கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொடுங்கள் ஐயா!’ என்று கழிவிரக்கமிகு வேண்டுகோளையும் அவருக்கு அர்பணித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்ததும் ---

      என் மனைவி கேட்டாள்.

      ‘போன காரியம் என்னவாயிற்று?’ விஷயத்தைச் சொன்னேன். 

      ‘அது சரி, உங்க செல்போன் நம்பரை அவரிடம் கொடுத்த மாதிரி அவரது செல்போன் நம்பரை நீங்கள் கேட்டு வாங்கினீர்களா?’ – என்று என் மனைவி கேட்டதும் தான் என் மூளைக்குச் ‘சுரீர்’ என்று பட்டது. என்னவானாலும் அவளுக்குள்ள புத்திசாலித்தனம் எனக்கு வராதுதான்.

      இனி என்ன செய்வது?

      செல்போன் அழைப்பிற்காக காத்திருக்க வேண்டியது தான்.

      என் ஜனவரி மாத பென்ஷன் எங்கே பேயிற்று என்று கண்டுபிடிக்கப் பட்டு அதை என் வங்கி கணக்கிற்கு மாற்றியதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன், என்ன?


    அது வரை------
    நானும் காத்திருக்கிறேன்!
    நீங்களும் காத்திருங்கள்!
      நம்பிக்கையே வாழ்க்கை

தும்பிக்கையான் துணை!

No comments:

Post a Comment