இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Monday 9 June 2014

மனிதம்

            சாரங்கன் பாதிச் சுமையை இறக்கிவைத்திருந்தாலும் மீதமுள்ள அந்த பாதிச்சுமை முன்பிருந்த முழுச்சுமையைவிட அதிகக் கனத்துடன் அவனது மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

            அதற்குக் காரணமும் இருந்தது. சாரங்கன் பெற்றது இரண்டு. இரண்டும் பெண்கள். மூத்தவள் நர்மதா +2வுடன் தன் படிப்பை முடித்துக் கொண்டாள். மேற் கொண்டு  படிக்க அவளுக்கு நாட்டமில்லை. ஆனால் வீட்டு வேலை - சமையல் போன்ற குடும்பப் பாங்கான பணிகளில் கில்லாடிதான். எந்த வேலையையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் சுபாவம்.

             சின்னவள் வசுமதி அப்படி அல்ல; சாப்பிடுவதற்கு மட்டும்தான் சமையலறைக்குள் நுழைவாள். மற்றபடி எப்போதும் அவளது கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். படிப்பில் அப்படி ருசிக்கண்ட பூனை. +2 முடித்தவுடன் அப்பாவிடம் அடம் பிடித்து கல்லூரிக்குள் நுழைந்துவிட்டாள். அரசு கல்லூரி தான் என்பதால் செலவு ஜாஸ்தி இல்லைதான். அவள் இரண்டாம் ஆண்டு படிக்கும் சமயம் தான் சரங்கன் ஐம்பத்தெட்டு வயதை பூர்த்தி செய்து கொண்டார். விளைவு ---
அரசு அலுவலகக் கடை  நிலை ஊழியரான சாரங்கன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்காளானான். ஓய்வும் பெற்றான்.

கிராஜீவிடி, கமிடேஷன் என்று கொஞ்சம் பணம் வந்ததும், சாரங்கனின் மனைவி சகுந்தலா, ‘என்னங்க…. என்னங்க….’ என்று தன் மகளின் கல்யாணத்துக்காகத் துளைத் தெடுக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த விஷயத்தில் தகப்பனைவிட தாய்க்குத்தானே அதிக அக்கறை, கமிட்மெண்ட் எல்லாம். இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாது. சகுந்தலாவும் கொஞ்சம் புத்திசாலி – கொஞ்சம் பொறுப்புள்ள இல்லத்தரசிதான். இல்லை என்றால் கணவனின் அந்தக் குறைந்த ஊதியத்திலும் சிறுகச்சிறுக மிச்சம் பிடித்து முப்பது பவுன் வரை நகை வாங்கி சேமித்திருக்க முடியுமா?

ஆளுக்கு பதினைந்து பவுன் போட்டு இரண்டு பெண்களுக்கும் ஜாம்ஜாம் என்று கல்யாணம் நடத்திவிட வேண்டும் என்பது அவள் திட்டம். தங்கம் கிராம் 300, 400களில் இருக்கும் போதே சிறுகச்சிறுக நகை வாங்கி சேர்த்தாளோ, தப்பிச்சாளோ! இல்லை என்றால் இப்போது ஆயிரங்களில் தாண்டவமாடும் நிலையில் தங்க நகையாவது இன்னொன்னாவது – அவளைப் போன்ற ஏழைகளால் தங்கக் கனவாவது காணமுடியுமா என்ன?

  ஆனால் --

அங்கே தான் விதி கொஞ்சம் விளையாடியது.

சாரங்கன் ஓய்வு பெற்ற கையோடு மகளுக்கு மாப்பிள்ளைத் தேட ஆரம்பித்தான். மாப்பிள்ளைத் தேடுவது என்ன லேசா? மாப்பிள்ளை வேட்டையாடுவதுஎன்று அந்த காலத்தில் சொல்வார்களே…. அப்படி வேட்டையாடி அல்லவா பிடிக்க வேண்டும்.

நர்மதா, வசுமதி இருவருமே நல்ல அழகு – குணம் – ஆனால் ஏழையாயிற்றே. கல்யாண மார்க்கெட்டின் வாசலைக் கூட அவர்களால் மிதிக்க முடியவில்லையே!

சாரங்கன் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான். பையன் ஏழையானாலும் நல்ல குணமுள்ள – அரசுப் பணியில் உள்ள – பையனாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நிலையான வருமானம் கிடைக்கும் –வயதான காலத்தில் பென்ஷனில் யார் தயவையும் எதிர் பார்க்காமல் இருப்பதைக் கொண்டு சந்தோஷமாகக் காலம் தள்ளலாம். என்ன, சரிதானே?

எல்லாம் சரிதான். ஆனால் இந்த காலத்தில் அரசு ஊழியம் பார்க்கும் கடைநிலை ஊழியர் கூட பெண்ணிற்கு முப்பது பவுன் நகை, பையனுக்கு இரண்டு பவுன் சங்கிலி, வெள்ளிக்குடம், வெள்ளித்தட்டு என்று ஒரு பெரிய லிஸ்டையே நீட்டுகிறார்களே! அவன் காலம் போலவா இப்போது. சாரங்கன் சகுந்தலாவைக் கல்யாணம் செய்து கொள்ளும் போது அவள் வெறும் பத்து பவுன் நகையுடன் வந்தவள். அதையே அவனும் அவனது குடும்பத்தாரும் பெருமையோடு செல்லிக் கொண்டார்கள். ஆனால் இப்போது?

நர்மதா இருபத்தெட்டைத் தாண்டி விட்டாள்.’ பெண்களுக்கு வயது ஏற ஏற பவுனும், சீர் வரிசையும் ஏறத் தொடங்கி விடும். அதனால் சீக்கிரம் உன் மகளின் திருமணத்தை எப்படியாவது முடி’ என்று நெருங்கிய நண்பர்களும் அக்கறை கொண்ட உறவினர்களும் அவ்வப்போது எச்சரிக்க ஆரம்பித்தனர்.

எத்தனை வரன்கள் வந்து பார்த்தாலும் அத்தனைப் பேருக்கும் பெண்ணைப் பிடிக்கிறது. ஆனால் பவுனில் தான், முப்பதுக்கும் வெள்ளியில் குடம், தட்டுக்கும் குறைய மாட்டேன் என்றார்கள்.

பதினைந்து பவுன் நகைக்கு ஒரு சிறிய ஜவுளிக் கடையில் இரண்டாயிரம் சம்பளம் வாங்கும் சேல்ஸ்மேன் தான் கிடைப்பான் போலிருந்தது.

‘என்னங்க… இப்போ இருக்கிறதை வச்சிக்கிட்டு நர்மதா கல்யாணத்தை முடிச்சிடுவோம்! அதுக்குப் பிறகு வசுமதி கல்யாணத்தை யோசிப்போம். படைச்சவன் வழிகாட்டாமலா போய் விடுவான்!’ – என்று சகுந்தலா கூறும் போது சாரங்கன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ‘படைத்தவன் யார்? நான் தானே!‘.

கடைசியில் நர்மதாவிற்கு ஒரு நல்ல இடம் வாய்த்தது.

பையன் தொடக்கப்பள்ளி ஆசிரியர். தனியார் பள்ளி என்றாலும் எய்டட் (அரசு உதவிப் பெறும்) பள்ளி. அரசு ஊதியம் பென்ஷன் அடேயப்பா…. சாரங்கனுக்கும், சகுந்தலாவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி. நர்மதாவுக்கு அதுக்கும் மேல்.

ஆனால்-

கையில் இருக்கும் முப்பது பவுன் நகையும் நர்மதாவிற்கே தாரை வார்த்துவிட்டு கையில் இருக்கும் மூன்று லகரத்தில் சீர் செனத்தி செய்து மாப்பிள்ளை வீட்டார் மனம் கோணாத படி கல்யாணத்தை முடித்த பிறகு-

சந்தோஷமும், நிம்மதியும், திருப்தியும் மட்டும் தான் மிச்சம். பாங்க் பாலன்ஸ் – சேமிப்பு காலி!

இதைத் தான் நான் முதலிலேயே சொன்னேன்,’ சாரங்கன் பாதிசுமையை இறக்கி வைத்திருந்தாலும் மீதமுள்ள அந்தப் பாதிச்சுமை முன்பிருந்த அந்த முழுச் சுமையை விட அதிக கனத்துடன் அவனது மனதை அழுத்திக் கொண்டிருந்தது என்று.’

அன்று கொஞ்சம் நகையும் பணமும் இருந்ததால் மகளின் திருமணத்தில் கொஞ்சம் தைரியம் இருந்தது. நர்மதாவின் திருமணத்திற்குப் பின் எல்லாமே போய் விட ஏதோ நடுத்தெருவில் நிர்வாணமாக நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது சாரங்கனுக்கு.

இனி வசுமதியை எப்படி கரையேற்றவது.? இப்போது நகை என்று பார்த்தால் சகுந்தலா கழுத்தில் இருக்கும் மூன்று பவுன் சங்கலி,; கையில் தவழும் மூன்று பவுன் வளையல். இதுவும் அவளது தாய் வீட்டுச் சீதனமாக வந்த பத்துபவுனின் மிச்சமாக உள்ள ஆறு பவுன் தான். மீதி நாலு பவுன் தான் வசுமதி கழுத்திலும் கையிலும்.

இனி அவளுக்கு முப்பது பவுன்-- வேண்டாம் இருபது பவுன் நகை வாங்க வேண்டுமானாலும் இன்றைய நிலவரத்தில் லட்சங்களில் அல்லவா ஓடும்.—மேற்கொண்டு கல்யாணச்செலவு…..அதுவும் லட்சங்களில்---தேம்பித்தேம்பி அழ வேண்டும் போல் இருந்தது சாரங்கனுக்கு.

      சித்திரக்குளத்தின் எதிர் தெருவில் இடது பக்கமுள்ள முட்டுச்சந்தில் ஒண்டிக்குடித்தனம் நடத்தும் சாரங்கன்---ஓய்வு பெற்று பென்ஷனில் குடும்பம் நடத்தும் அந்த முன்னாள் கடைநிலை ஊழியன் இனி லட்சங்களை நினைத்துப் பார்க்கத்தான் முடியுமா? முடியாவிட்டால் வசுமதியின் கல்யாணமும் முடியாதே!

          ஈஸ்வரா!                                                    

         கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் இறைவன் சன்னிதியில் கண்கள் குளமாக விம்மிவிம்மி ‘ ஈஸ்வரா!’—என்றான்.அதற்கு மேல் பிரார்த்திக்க அவனால் முடியவில்லை.துக்கத்தின் பளு அப்படி!

         மண்டபத்தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி கண்களை மூடி மகளின் எதிர்காலத்தை நினைத்து திகைத்து ஸ்தம்பித்திருந்தான்                        
                                                       
                                                     ******************

.  ‘’என்னங்க!ஏன் இப்படி சதா கவலைப்படறீங்க.நர்மதாவுக்கு வழிகாட்டிய பகவான் வசுவுக்கு மட்டும் வழிகாட்டாமலா போய் விடுவான்.!தைரியமா இருங்க!இந்த வருஷத்தோட அவ படிப்பும் முடிஞ்சிடும்.ஒரு வேலைக்குப் போய்……….’’

‘’ஆமாடி! இனிமே அவ வேலைக்குப் போய் சம்பாதித்து நகை நட்டு வாங்கி கல்யாணம் பண்ணிப்பாளா?நடக்கிற காரியமா இது?வெறும் பி.எஸ்சி.படிச்சவளுக்கு என்ன வேலை கிடைக்கும்?அவ எப்ப சம்பாதிக்க ஆரம்பிக்க?எப்ப காசு சேர்த்து---எப்ப கல்யாணம் பண்றது?கிழவியான பிறகா?அதுவரைக்கும் நானும் நீயும் இருப்பமா?சும்மா கனவு காணாதே!’’--- எரிச்சலுடன் பேசினான் சாரங்கன்.

       ‘’நீங்க கோவிச்சுக்க மாட்டேள்னா நான் ஒண்ணு சொல்வேன்!’’

       ‘’இல்லே, சொல்லு!’’

      ‘’அடையாறிலே இருக்காரே உங்க தம்பி சண்முகசுந்தரம் அவரிட்டே போய் பண உதவி கேட்டுப்பாருங்களேன்!அண்ணன் மகள் கல்யாணத்துக்கு உதவாமலா போவார்?’’---என்று சகுந்தலா கூறியதும்,’’ப்ச்’’—என்று உதட்டைப் பிதுக்கினான் சாரங்கன்.

        சண்முகசுந்தரம் சாரங்கனின் கூடப்பிறந்த தம்பிதான்.ரொம்பக் கெட்டிக்காரன்.படிப்பு ஏறாமல் சாரங்கன் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்(!) அரசு பணிபெற்றாலும் சண்முகசுந்தரம் நன்றாகப் படித்து ஸ்காலர்ஷிப்பிலேயே பி.ஈ.முடித்து இப்போது ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பேனியில் மேலாளராக லட்சங்களில் ஊதியம் பெறும் செல்வச் செழிப்பு உள்ளவர்.சாரங்கன் இதுவரை தம்பியிடம் உதவி என்று போனதில்லை அதோடு சாரங்கனின் இரண்டாவது தம்பி குணசேகரன் ஆரம்பத்தில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து –அந்த அனுபவத்தில் பின் தானே சொந்தமாக ஒரு சிறு கடையைத் தொடங்கி இன்று பெரிய ஜவுளிக்கடை முதலாளி.

         இவர்கள் யாரும் இதுவரை அவனுக்கு எந்த ஒரு உதவியும் செய்ததில்லை.அவனும் அவர்களிடம் இதுவரை எந்த ஒரு உதவியும் வேண்டிப் போய் நின்றதில்லை. ஏன்? நர்மதாவின் கல்யாணத்தின் போது கூட அவர்கள் எந்த ஒரு உதவியும் செய்த்தில்லை; அவனும் பெற்றதில்லை..நாலுபேர் போல் அவர்களும் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு வந்தார்கள். ஆளுக்கு ஐநூறு ரூபாய் மொய் எழுதி விட்டுப் போனார்கள். அதோடு சரி.

       இவர்களிடம் போய்………………..?

      ஆனால் வேறு வழியும் இல்லை!

      சகுந்தலா தினமும் நச்சரிக்க ஆரம்பித்தாள்.’ ஒரு நடை அடையாருக்குத்தான் போய்விட்டு வாருங்களேன்’—என்ற அவளது தொணதொணப்பைத் தாங்க முடியாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை அடையாறில் உள்ள சண்முகசுந்தரத்தின் பங்களாவிற்குக் கிளம்பிவிட்டார்.

       அங்கே--------------

      சோபாவில் அமர்ந்தபடி’ லாப்டாப்’பில் மூழ்கி இருந்த சண்முகசுந்தரம் சாரங்கனைப் பார்த்ததும் ‘’வாங்கண்ணா!’’---என்று விட்டேத்தியாக அழைத்து விட்டு,’’நர்மதா---மாப்பிள்ளை எல்லாரும் நல்லா இருக்காங்களா?’’—என்ற கேள்வி ஒன்றையும் அவர் முன் வைத்து விட்டு மீண்டும் ‘லாப்டாப்’பில் மூழ்கி விட்டார்.

      ‘’நல்லா இருக்காங்க!’’---என்ற ஒற்றை வரி பதிலைக் கூறி விட்டு அடுத்து எப்படி பேச்சைத் தொடங்குவது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்த சாரங்கனுக்கு நிமிடங்கள் ஒவ்வொன்றும் யுகங்களாக நீண்டு நகர்ந்தன. சோபா முள் இருக்கையாக நெளியவைத்தது. இதுவரை யாரிடமும் எந்த ஒரு உதவியும் கேட்டு நிற்காதவருக்கு இப்போது கடும் மன உளைச்சல் உண்டாகியதுடன்’’ எப்படி பேச்சைத் தொடங்கி என்னவென்று எப்படியென்று கேட்பது?’’—எனப்புரியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தவருக்குக் கபாலீஸ்வரர் துணை கிடைத்த்து. ஆம்,உள்ளே இருந்து வந்த தம்பி மனைவி மஞ்சுளா சாரங்கனைப் பார்த்ததும் முகம் மலர’’வாங்கோ! எப்போ வந்தேள்?அண்ணியைக் கூட்டிட்டு வரலியா?’’—என்று குசலம் விசாரித்ததும் சாரங்கனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது.

          ‘’இல்லை! இந்தப்பக்கம் ஒரு வேலையா வந்தேன்! அப்படியே உங்களை எல்லாம் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு தோணித்து !’’---என்று இல்லாத ஒன்றைக் கூற, மஞ்சளா தொடர்ந்து,’’நர்மதா கல்யாணத்தை நன்னா முடிச்சிட்டோம்! அடுத்து வசுவின் கல்யாணத்தையும் இப்படியே சீக்கிரமா முடிச்சிடுங்க. அவ படிப்பு முடிஞ்சிருக்குமே!’’----என்று கேட்டதும் சாரங்கனுக்குக் கொஞ்சம் லேசாய் மங்கலான ஒளி தட்டுப்பட்டாற் போல் தோன்றியது. தொடர்ந்து சொன்னார்,’’ இல்லே! இது கடைசி வருஷம்! அவ கல்யாணத்தையும் சீக்கிரம் முடிக்கணும்னு உங்க அண்ணி ஒத்தைக் காலிலே நிக்கிறா!’’---என்று வந்த விஷயத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டார் சாரங்கன்

           ‘’ இருக்காதா பின்னே! பொம்புளைப் புள்ளெங்க திரும்பிப் பார்க்குறதுக்குள்ளே மடமடன்னு வளர்ந்துடறாளே!’’----என்று கூறிய மஞ்சுளா தொடர்ந்து கேட்டாள்,’’வசுவுக்கு வரன் ஏதாவது திகைச்சிருக்கோ?’’

            சாரங்கனுக்கு அந்த மங்கலான ஒளியில் கொஞ்சம் பிரகாசம் கூடினாற் போல் தோன்றியது.

             ‘’இதுவரை இல்லை! கையிலே இருந்த நகை,பணம் எல்லாம் போட்டுதானே நர்மதா கல்யாணத்தையே முடிச்சேன்! இப்போ வசு கல்யாணத்துக்கு கையிலே காசில்லே! ஒரு இருபது பவுன் நகையாவது வாங்கணும்! கல்யாணச்செலவு வேற! அதான் தம்பி சண்முகமும் குணசேகரனும் கொஞ்சம் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணினா வசு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு உங்க அண்ணி அபிப்பிராயப்படறா. அது விஷயமாத்தான் தம்பிகிட்டே பேசலாம்னு வந்தேன்!’’-----என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தயங்கித் தயங்கி விஷயத்துக்கு வந்தார் சாரங்கன். இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் பட்டபாடு அந்த கபாலீஸ்வரருக்கே வெளிச்சம்.

              லாப்டாப்பில் மும்முரமாக விரல்களை விரல்களை ஓட்டிக் கொண்டிருந்த சண்முகசுந்தரத்தின் காதில் இந்த செய்தி விழுந்ததும் திடுக்கிட்டு----விருட்டென நிமிர்ந்தான்.

                 ‘’என்ன?...........என்ன?’’

             குடியே முழுகிவிடப்போவது போல் பதறிய சண்முகசுந்தரம், ‘’பணமா----கல்யாணத்திற்கா------???---லட்சக்கணக்கிலே இல்லே தேவைப்படும்! இப்போ என்கிட்டே ஏது அவ்வளவு பணம்? நாலு மாசத்துக்கு முன்னேதான் வேளச்சேரியில் அறுபது லட்சத்துக்கு ஒரு பிளாட் வாங்கிப் போட்டேன்.!’’---என்று கணக்கு காட்ட ஆரம்பித்தவன் தொடர்ந்து,’’இப்போ என் பெரிய பையன் மேலே படிக்க லண்டனுக்குப் போகணும்கிறான்! அந்தச் செலவுக்கே நான் என்ன பண்றதுன்னு திகைச்சிக் கிட்டு இருக்கேன்! நீ வேற?’’---என்று சிகப்பு விளக்கை எரியவிட்டார்.

     சாரங்கனுக்கு சங்கடமான சங்கடம்! ‘ஏண்டா வந்தோம் என்றாகி விட்டது.

       ‘’இது பொண்ணோட கல்யாணச்செலவு. நீ கொஞ்சம் மனசு வச்சா… ஏதோ ஒரு மூணு லட்சம் கொடுத்தா கூடப் போதும்! குணசேகரன் கிட்டேயும் கொஞ்சம் கேட்டு வாங்கி எப்படியாவது வசுவோட கல்யாணத்தை முடிச்சிடுவேன்! நீ இல்லேன்னு சொல்லப்படாது. உங்க ரெண்டு பேரையும்தான் நம்பி இருக்கேன்! உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா?’’

       _______கொஞ்சம் விட்டால் சாரங்கன் அங்கேயே அழுது விடுவார் போல் இருந்தது.

        ‘’அண்ணா நான் வச்சிக்கிட்டா இல்லேங்குறேன்! என் நிலைமையைத்தான் சொல்லிட்டேனே. நீ ஒண்ணு பண்ணு. குணசேகரனையே போய் பாரு இப்போ அவனுக்கு வியாபாரம் ‘’ஓஓ’’ன்னு ஓடிண்டிருக்கு. மெட்ராஸ்லேயே ரெண்டு பிராஞ்சை திற.ந்திட்டான். போதாதுக்கு மதுரையிலேயே தெற்கு மாசி வீதியிலே ஒரு பெரிய இடத்தையே வாங்கிப் போட்டிருக்கிறான். சினிமா தியேட்டர் இருந்த இடமாம். அதை இடிச்சி ஒரு பெரிய ஜவுளிக்கடை கட்டப் போறான். நீ போய்க் கேட்டா---அவன் நெனச்சா நாலு என்ன பத்து லட்சம் கூட அவனாலே புரட்டித்தர முடியும்.!’’

        ----‘’-ஆளைவிட்டா போதும் சாமி’’ என்பது போல் விட்டேத்தியாக பதில் அளித்த சண்முகசுந்தரம்,’’அடியே! அண்ணனுக்குக் குடிக்க ஏதாவது கொண்டுவரப்படாதோ? ஏன் இப்படி மசமசன்னு நின்னுட்டிருக்கே!’’----என்று மனைவியை ஒரு அதட்டு அதட்டினார்.

        ‘’இல்லேப்பா! எனக்கு ஒண்ணும் வேணாம்! இப்பதா வரச்சே காபி சாப்பிட்டுட்டுதான் கிளம்பினேன். சரி,நான் வர்ரேன்! கொஞ்சம் யோசனை பண்ணி வை! ரெண்டு விளக்கு ஏத்தி வைத்த புண்ணியம் கிடைக்கும்!’’
       ------என்று தளர்வுடன் கூறியபடி முள் சோபாவில் இருந்து எழுந்தார் சாரங்கன்.

                                                         *************

       ‘’ இதுக்குத்தாண்டி நான் சொன்னேன், யாரண்டேயும் போய் கை நீட்ட மாட்டேன்னு!’’

        -----என்று அலுப்பு கலந்த கோபத்துடன் கூறிய சாரங்கன் ஈஸிசேரில் ‘தொப்’பென விழுந்தார்.

        வெளியே வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த்து.

       ஒரு டம்ளரில் எலும்மிச்சம் பழத்தைப் பிழிந்து தண்ணியும் உப்பும் போட்டுக் கலக்கிக் கொண்டு வந்து அவரிடம் நீட்டியபடி,’’மொதல்லே இதைக் குடிங்க. வெயில்லே வந்ததுக்கு இதமா இருக்கும். பாக்கி அப்பறம் சொல்லலாம்.!’’---என்றபடி டம்ளரைக் கணவர் முன் நீட்டினாள் சகுந்தலா.

      அவள் நீட்டிய வாங்கிக் குடித்து விட்டு மேல் துண்டால் வாயைத் துடைத்தபடி சொன்னான் சாரங்கன்,’’ இனிமே என்னடி இருக்கு சொல்றதுக்கு! லட்சம் லட்சமா சம்பாதிக்கிற அவன்கிட்டே கால்துட்டு கூட இல்லையாம்! கொஞ்சம் விட்டா கணக்கு காட்ட ஆரம்பிச்சிடுவாங்க போல இருந்த்து. பாவம்டி அவனை விட நாம தேவலாம்னு வந்துட்டேன்.!’’---- என்று இளக்காரமாகக் கணவன் கூறிய பதிலிலேயே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை சகுந்தலாவால் ஓரளவு ஊகிக்க முடிந்த்து.

      ‘’உங்களுக்குப் பேசத் தெரியலே! அதான் இப்படி வெறுங்கையா வந்திருக்கேள்! நானும் கூட வந்திருக்கனும்!’’--- என்று கூறியதும் சாரங்கனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

       “”ஆமாமா! நீ மட்டும் கூட வந்திருந்தா நச்சியமா பேசி லட்சம் லட்சமா வாங்கிண்டு வந்திருப்பே பாரு! ஐயோ அண்ணியே நேரிலே பிரதட்சணமாகி கேட்கிறாளேன்னு அவனும் அள்ளி அள்ளி கொடுத்திருப்பான்! அடப்போடி இவளே!----என்று கூறிய சாரங்கன் தொடர்ந்து, ‘’நான் ஒருத்தன் போய் அவமானப்பட்டு வந்தது போதாதுன்னு நீ வேற வந்து அவமானப்பட்டு இருக்கனுமா?’’---என்ற அவனது குரலில் கொஞ்சம் ஆவேசமும் அதிகமான ஆதங்கமும் இரண்டறக் கலந்திருந்தன.

      ‘’வேற என்னங்க செய்றது? பெண்ணைப் பெத்துட்டோமே! பட்டுத்தானே ஆகனும்! அவளைக் கரையேத்த வேண்டாமா? பெண்ணெப் பெத்து அவளெக் கன்னிக் கழிக்காம விட்டா அது மகாப் பாவங்க!’’----அங்கலாய்த்தாள் சகுந்தலா.

     ‘’ ப்ச்’’----என உதட்டைப் பிதுக்கிக் கொண்ட சாரங்கன் மனைவியிடம்,
     ‘’பார்த்தியாடி! எங்க அப்பனுக்கு நாங்க மூணு பிள்ளைங்க. அதிலே மூத்தவனான நான் மட்டும் வேலைக்குப் போய் வயித்துக்கும் வாய்க்கும் போராடிண்டு இருக்கேன். எனக்கு அந்த ஆண்டவன் போட்ட பிச்சை -----ரெண்டு பொட்டப்புள்ளைங்க! எல்லாம் செலவு அயிட்டம்! என் தம்பிங்க ரெண்டு பேரும் நல்லா வளமா இருக்காங்க. ஆனா ஆண்டவன் அவங்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் ரெண்டு ஆம்புளைப் புள்ளைங்க. எல்லாம் வரவு அயிட்டம்! இந்தக் கூத்தெ எங்க போய் சொல்றது?

     ‘’ எனக்குப் பிறக்குறதுக்குப் பதிலா இந்தப் பொண்ணுங்க ரெண்டு பேரும் அவனுங்களுக்கு மகளாப் பிறந்திருந்தா அவங்க வசதிக்கு கைக்கும் கழுத்துக்கும் சுமக்க முடியாத அளவு நகைகளை மாட்டி விட்டுப் பெரிய இடத்திலே தடபுடலா---ஜாம்ஜாம்ன்னு கட்டிக்கொடுத்திருப்பாங்க. அவங்களுக்குப் பொறந்த மாதிரி எனக்கும் ரெண்டும் பசங்களாப் பொறந்திருந்தா இன்னிக்கிப் படிச்சி நல்லா சம்பாதிச்சு நம்மையும் தாங்கிக் கிட்டிருப்பாங்க! நமக்குத் தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட அந்த ஆண்டவனுக்கு மட்டும் ஏன் புரியாமப் போச்சு!’’----என்று அங்கலாய்த்த சாரங்கன், தன் மனக்குமுறலை அடக்கி வைக்க முடியாமல் தொடர்ந்து பேசினான், ‘’என்னம்மோ இந்த காலத்திலே ஆணுக்குச் சமமா பொண்ணுங்களும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு சொல்லி இனி ஆண் பெண் வித்தியாசமில்லை சமத்துவம்னு சொல்லிப் பெரிசா பீத்திக்கிறாங்க. ஆனா கல்யாணம்னு வந்தா பொண்ணு என்னதான் படிச்சி கை நிறைய சம்பாதிச்சாலும் பையன் வீட்டுக்காரா கேட்கிற முதல் கேள்வி பொண்ணுக்கு நகை எவ்வளவு போடறேள்? சீர் என்ன செய்றேள்?—என்கிறதுதானே! பையன்க கல்யாணத்துக்குப் பிறகும் தன் சம்பாதியத்தை அப்பா அம்மா கிட்டே தர மாதிரி பொண்ணுங்க தர முடியுதா? காலம் எவ்வளவு மாறினாலும் பொண்ணு பொண்ணுதான்----ஆணுஆணுதான்! பெண் முன்னேறிவிட்டாள்ங்கிறது சும்மா ‘டுபாக்கூர்’’ பேச்சுதான்!’’---என்று பொருமித்தள்ளிய சாரங்கன்,’’படிக்காத பொண்ணுங்களை விடப் படிச்ச பொண்ணுங்களுக்குத்தான் கஷ்டம் ஜாஸ்தி. படிக்காத பொண்ணுங்களாவது வீட்டிலேயே இருந்து வீட்டு வேலைப் பார்த்து காலம் தள்ளிடறா! ஆனா இந்தப் படிச்சப் பொண்ணுங்க வீட்டு வேலையும் பார்க்கணும் கூடவே ஆபீஸுக்கும் போய் வரணும். எந்த கணவனாவது கொஞ்சம் இரக்கப்பட்டு சமையலறைக்குள் நுழைஞ்சி மனைவிக்கு ஒத்தாசை பண்ணனும்னு நெனக்கிறானா? ம்ம்ம்! ப்ரஸ்டீஜ்…..ஆம்புளெ ப்ரஸ்டீஜ் போயிரும் இல்லே!’’

      கணவரின் மனம் அனலாய்க் கொதிப்பதை அறிந்த சகுந்தலா இது பேசும் சமயமல்ல என்பதைப் புரிந்து கொண்டு மௌனம் சாதித்தாள். அவனது கோபம் கொஞ்சம் சமனப்பட்ட பிறகு பேசிக் கொள்ளலாம் என்று வாளாய் இருந்து விட்டாள்.

                                                                   *************

        ஒரு வாரம் சென்றிருக்கும். பெண்களைப் பெற்ற தாயல்லவா? பொறுப்பைத் தட்டி கழிக்கவா முடியும்?

       சாயந்திரம் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் புறப்பட்டார் சாரங்கன்.                      ‘’ கோவிலுக்குத்தானே! நானும் வரட்டா!’’----என்ற மனைவியைப் புன்முறுவலுடன் நோக்கி,’’வாயேன்! ஆம்பிள்ளைங்க தனியா சாமி கும்பிடப் போனா பாதிப்புண்ணியம்தான் கிடைக்குமாம்! தம்பதி சமேதரராய்ப் போனாதான் முழுப்புண்ணியம் கிடைக்குமாம்! ஆனா பாரேன் பொம்மனாட்டிங்க மட்டும் தனியா கோவிலுக்குப் போனாலும் அவாளுக்கு மட்டும் முழுப்புண்ணியம் கிடைக்குமாமே! எனக்குத் தெரிஞ்சி இந்த ஒரு விஷயத்திலே மட்டும்தான் ஆணை விடப் பெண்ணை உசத்தி உச்சத்திலே வச்சிருக்கா!’’----என்றதும், ‘’ஏதேது வரவர வக்கணையாப் பேசக் கத்துண்டேள்!’’---என்றபடி கணவனைப் பின் தொடர்ந்து கோவிலுக்குப் புறப்பட்டாள் சகுந்தலா.

       கபாலியையும் கற்பகாம்பாளையும் தரிசனம் செய்து கோவிலையும் வலம் வந்த பின் சாரங்கன் தான் வழக்கமாக அமரும் மண்டபத்தில் வந்து உட்கார்ந்தான். எதிரே சண்முகர் சந்நிதி.’’முருகா’’ என்று அழைத்தபடி கணவன் அருகில் உட்கார்ந்த சகுந்தலா ‘எப்படி பேச்சைத் தொடங்கலாம்’ என்று மனசுக்குள் திட்டம் போடத் தொடங்கினாள்.

         “”என்ன சகு, சிந்தனை பலமா இருக்கும் போல இருக்கு?’’---என்ற கணவரின் கேள்வியையே பிள்ளையார் சுழியாக ஏற்றுக் கொண்ட சகுந்தலா வந்தது வரட்டும் ஆனது ஆகட்டும் என்ற ரீதியில் மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.

        ‘’வேற ஒண்ணுமில்லேங்க. நம்ம வசுவோட கல்யாணத்தைப் பத்தித்தான் நினைச்சிண்டிருந்தேன். எப்படியும் வர்ர தைக்குள்ளே முடிச்சிடணும்க!’’

       சாரங்கனுக்குச் சிரிப்பு வந்தது. இந்த பொம்மனாட்டிங்க எவ்வளவு அழகா வெத்துக் கையாலே முழம் போடறாள்னு நினைத்துக் கொண்டவர் ‘’ம்ம்! பார்ப்போம். பகவான் இருக்கான்!’’----என்றதும் சகுந்தலா,’’ அவர் இருக்கட்டுங்க! நாமளும் கொஞ்சம் முயற்சி பண்ண வேண்டாமா?’’---என்ற அவளது கேள்வியில் ‘ஏதோ பொடி வைத்துப் பேசுவது போல் இருக்கே’-என்று தோன்றியது சாரங்கனுக்கு.

       ‘’என்ன சொல்ல வர்ரே!’’---என்று அலுத்துக் கொண்டே கேட்டார் சாரங்கன்.
‘’உங்க தம்பி சண்முகசுந்தரம் கை விரிச்சிட்டார்ங்கிறதுக்காக நாம சும்மாவா இருக்க முடியும்?ஏன் குணசேகரன் கிட்டே நாம ரெண்டு பேரும் ஒரு நடை போய் பேசிப்பார்ப்போமே! அவர் கொஞ்சம் தாராள மனசுக்காரர். ரெண்டு மாசத்துக்கு முன்னே கூட திருப்பதியிலே குவார்ட்டர் கட்றதுக்கு எத்தனையோ லட்சம் நன்கொடையாக் கொடுத்தாராம்.அம்புஜம் சொன்னா! அப்படிப் பட்டவரு அண்ணன் மகளோட கல்யாணத்துக்கு உதவ மாட்டாரா?’’

      எரிச்சல் எரிச்சலாக வந்தது சாரங்கனுக்கு.

      ‘’ஏண்டி, இப்படியே ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போய் என்னை கையேந்த வச்சி அவமானப்படுத்துறன்னு கங்கணமே கட்டிண்டியா?’’---சாரங்கனின் குரலில் கோபம் கொந்தளித்தது.

    ‘’தம்பி கிட்டே போய் கேட்கிறதிலே என்னங்க அவமானம்? நம்ம குழந்தைகளுக்காக நம்ப மானத்தையும் கொஞ்சம் தியாகம் பண்ணுவோமே’’---என்று சகுந்தலா பேசிய பேச்சு யதார்த்தமானதா இல்லே குத்தல் பேச்சா என்று சாரங்கனால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

     மண்டபத்தூணில் சாய்ந்தபடி கண்ணை மூடிண்டார். வாய் மட்டும் முணுமுணுத்தது.

     ‘’ஓம் நம சிவாயா………..ஓம் நம சிவாயா…………’’

    இன்றைக்கு இது போதும் என்று முடிவு கட்டிவிட்டாள் சகுந்தலா.

                                                                      *****************
      ஒரு வாரம் கடந்த நிலையில் சகுந்தலா மெதுவாக சாரங்கன் முன் வந்து நின்று ‘’ ஏங்க!’’--- என்றாள்.

       ‘’அதான் தினமும் உன்னைப் பார்த்து ஏங்கிகிட்டு இருக்கேனே! வந்த விஷயத்தை சொல்லு!’’—என்று குத்தலாகப் பேசினான் சாரங்கன்.

      ‘’அதாங்க இன்னிக்கி தம்பி குணசேகரன் வீட்டுக்குப் போய் வசுமதி கல்யாண விஷயமாப் பேசிப் பார்ப்போமே!’’—என்று சற்றுத் தயக்கத்துடன் தன் கருத்தை சாரங்கன் முன் வைத்தாள் சகுந்தலா.

       ‘’போகலாம்தான்…! பேசலாம்தான்….! ஆனா எனக்கு முழுசா நம்பிக்கை இல்லை.அண்ணன் தம்பியா இருந்தாலும் அவன் பணக்கார ஜாதி. நான் ஏழை ஜாதி. என்னை அவன் உதறித் தள்றதுக்கு இந்த ஒரு வித்தியாசமே போதும்.!’’---என்று மறுத்துப் பார்த்தான் சாரங்கன்.

       எப்படியும் வசுமதியின் கல்யாணத்தை முடித்தாக வேண்டும் என்ற உறுதியான வைராக்கியத்தில் இருந்த சகுந்தலா ஒற்றைப் பிடிவாதம் பிடிக்கவே தொடர்ந்து மறுக்க முடியாமல் சம்மதித்தான் சாரங்கன்.

      மகள் கல்யாணத்தில் அவனுக்கு மட்டும் அக்கரை இல்லையா என்ன?

                                                                       ****************

      சாரங்கனும் சகுந்தலாவும் தி.நகரில் உள்ள அந்த பங்களாவிற்குள் நுழையும் போது காலையில் அடித்த படுவெயிலுக்கு எதிரான குளிர் காற்று ஜிலுஜிலுத்துக் கொண்டிருந்தது.

      மழை வருமோ?

      மனைவி நீட்டிய காப்பியை வாங்கிக் கொண்டிருந்த குணசேகரன் அண்ணனும் அண்ணியும் வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்று கஷ்டப்பட்டு ஒரு புன்முறுவலை உதடுகளில் நெளிய விட்டு’’வாங்கண்ணா-வாங்கண்ணி!’’---என்று வரவேற்று விட்டு,’’அகிலம் அண்ணன்---அண்ணிக்கு காபி கலந்து கொண்டு வா!’’—என்று கட்டளை யிட்டார். அப்போதுதான் திரும்பிப் பார்த்த அகிலாண்டமும்’’வாங்க…வங்க!—என்று பலமாக வரவேற்பளித்து,’’உட்கார்ந்து பேசிட்டிருங்க. இதோ வந்துட்டேன்!’’—என்று சமையலறைக்குள் சென்று விட்டாள்.

        சாரங்கன் தம்பிக்கு எதிரே சோபாவில் உட்கார சகுந்தலாவோ உரிமையோடு அகிலத்தைப் பின் தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தாள். காபி கலந்து கொண்டே அவர்களது உரையாடல் குசுகுசு வென்று நடந்தது.

          வசுமதியின் கல்யாணத்திற்கு வேண்டப்பட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதில் அகிலத்திற்கு மறுகருத்தில்லை. இருந்தாலும் குணசேகரனின் குணத்தை நன்கறிந்தவளாயிற்றே!

         ‘’ அவரிட்டே சொல்லி எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம் அண்ணி!’’---என்று அவள் உறுதி அளித்திருந்தாலும் தான் அளித்த உறுதியில் அவளுக்கே நம்பிக்கை இல்லை.

           காபியுடன் இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

           காபியைக் குடித்தபடி விஷயத்தை எப்படி தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தான் சாரங்கன். அதற்குள் அகிலாண்டமே முந்திக் கொண்டு அவனது குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.அவளே வசுமதி கல்யாண விஷயமாக அவர்கள் உதவி கேட்டு வந்திருப்பதை நைசாக---விளாவாரியாக---விளக்கியதும் குணசேகரன் சிந்தனையில் மூழ்கிவிட்டான்.

          ‘’அண்ணா! உங்களுக்குத் தெரியாத்தில்லே. இப்போ நான் வியாபாரத்தில் என் தகுதி மீறி அகலக்கால் வச்சிட்டேன். மதுரையிலே தெற்கு மாசி வீதியிலெ இடம் வாங்கிப் போட்டுட்டு கட்டிடம் கட்ட பணம் இல்லாமல் லோனுக்காக லோலோன்னு அழைஞ்சிகிட்டிருக்கேன். இந்த நேரம் எனக்கு ஒவ்வொரு ரூபாயும் அவ்வளவு முக்கியம் அதனாலே என்னை மன்னிக்கனும். அதுக்காக நான் ஒரே அடியா ஒண்ணுமே செய்ய முடியாதுன்னும் ஒதுங்கல்லே.அகிலமும் சொல்லிட்டா---- எனக்கும் ஆசைதான்.அதனாலெ கல்யாணப் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தேவையான பட்டுச்சேலைங்க மற்ற உடைங்களெல்லாம் நானே நம்ம கடையிலெ இருந்து தந்துடறேன். மத்த செலவுக்கு நீங்க வேற எங்காவது பாத்துக்குங்க.!’’

        -----விலாவாரியாகத் தன் நிலையையும் தன்னால் தன்னால் முடிந்த உதவிகளையும் கூறி முடித்தார். அந்தத் தம்பியைவிட இந்தத் தம்பி தேவலை என்பது போல் இருந்தது அவரது பேச்சு.
                                           
                                                                         **************

          “”இதுக்குத்தாண்டி நான் அவங்ககிட்டே எல்லாம் போக வேண்டாம்னு சொன்னேன்! பட்டு சேலையையும் மாப்பிள்ளை டிரஸையும் கொடுத்தா கல்யாணம் முடிஞ்சிடுமா? அரைக் கிணறுகூட இல்லே கால் கிணறு தாண்ட்றேன்ங்குறான்!’’

          வீட்டிற்குள் நுழைந்ததும் படபடவென வெடித்தான் சாரங்கன்.

          ‘’அவசரப்படாதேள்! நான் அகிலத்துக்கிட்டே நம்ம நிலைமை பூராவும் விவரமாச் சொல்லியிருக்கேன்! இப்பொ கொஞ்சம் இறங்கி வந்த தம்பி அகிலம் பேச்சைக் கேட்டு இன்னும் கொஞ்சம் இறங்கி வர மாட்டானா?’’----என்று அமைதியாகப் பேசி கணவனை ஆசுவாசப் படுத்த முயன்றாள் சகுந்தலா.

         ‘’ஆமா! வருவான்……கீழேகீழே இறங்கி வருவான்-----நினைச்சிக்கிட்டே இரு. எனக்குத் தெரியும்டி என் தம்பிகளைப் பத்தி!’’   என்று சடசடத்த சாரங்கன் தோள் துண்டை எடுத்து ஈஸிசேரில் இரண்டு தட்டு தட்டி விட்டு ‘பொத்’தென அதில் விழுந்தார். வேதனையில் அவரது விழிகள் மூடிக்கொண்டன.

                                                              ******************

         எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உண்டு.

        மறுநாள் காலையில் சாரங்கனுக்கு பஸ் ஏறி பாடிக்குப் போய் திருவல்லீஸ்வரரைத் தரிசித்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது. காரணம் அது பிரபலமான குருஸ்தலம்.ஏதோ அந்த குரு பார்வை பட்டாவது குருவின் கருணையால் தன் மகளின் கல்யாணம் நல்ல படியா முடியாதா என்ற ஆதங்கம்தான்!

       ‘’சகு’’---என்று மனைவியை அழைத்து தன் எண்ணத்தை வெளியிட்டதும் அவள் மகிழ்ந்தே போனாள். இப்பவே குருவின் பார்வை பட்டு தன் மகளின் கல்யாணம் நிச்சயமான மாதிரி அப்படி ஒரு பேரானந்தப் பிரமை அவளுக்கு!

      அந்த நேரத்தில்தான் சாரங்கனின் மூத்த மகள் நர்மதாவும் மாப்பிள்ளையும் உள்ளே நுழைந்தனர். மாப்பிள்ளையையும் மகளையும் பார்த்ததும் அக மகிழ்ந்த சாரங்கன் ‘’ வாங்க மாப்பிள்ளை! வாம்மா!’’---என்று வரவேற்று உபசரித்தார்.

     பள்ளி விடுமுறை காலங்களில் இருவரும் இப்படி அடிக்கடி வந்து போவது வழக்கம்தான். அம்மாவும் பொண்ணும் சமையலறைக்குள் நுழைந்தனர்.சாரங்கன் மாப்பிள்ளையுடன் சில பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார் சிறிது நேரத்திற்குப் பின் சமையலறையில் இருந்து பாலுடன் வந்த சகுந்தலா மாப்பிள்ளையிடம் பால் டம்ளரை நீட்டி விட்டுத் தன் கணவரிடம்,’’என்னங்க நம்ம நர்மதாவும் மாப்பிள்ளையும் நம்ம கிட்டே ஏதோ முக்கியமான விஷயம் பேச வந்திருக்காங்களாம்.!’’—என்றதும்---
    ‘’முக்கியமான விஷயமா?அப்படி என்ன……?’’----என்று சாரங்கன் தயங்கும் போது சகுந்தலா தொடர்ந்தாள்,’’எல்லாம் நம்ம வசுவோட கல்யாண விஷயம்தான்! நல்ல விஷயம்தானே!’’---என்று சகுந்தலா கூறியதும் சாரங்கன் சுதாரிப்புடன்,’’விஷயம் நல்ல விஷயம்தான். ஆனா அதுக்கான பணத்துக்காகத்தானே நாம அலைஞ்சிண்டு இருக்கோம்!’’—என்றார்.

    ‘’அப்பா! நான் சொல்றேன். கொஞ்சம் அமைதியா நிதானமா ஆத்திரப் படாம கேட்கணும்!’’---பீடிகை போட்டாள் நர்மதா.

    ‘’என்னம்மா…..பெரிசா ஏதாவது குண்டு தூக்கிப்போடப்போறியா’’---என்று கேள்வி எழுப்பிய சாரங்கனின் மனதில் கொஞ்சம் திகிலும் தலைதூக்க ஆரம்பித்தது

     ‘’அப்படி ஒண்ணும் இல்லேப்பா.நேத்து வசுமதி எங்க வீட்டுக்கு வந்திருந்தா!ரொம்ப நேரம் மனம் விட்டு பேசினா. உங்க கிட்டே சொல்ல பயந்துண்டு எங்க கிட்டே வந்து சொல்லியிருக்கா!’’----என்று நர்மதா ஆரம்பித்ததும் சாரங்கனால் படபடப்பை அடக்க முடியவில்லை.

    ‘’அம்மா நர்மதா! கொஞ்சம் புரியும்படி சொல்லும்மா! எங்க கிட்டே சொல்ல பயப்பட்ற அளவுக்கு அப்படி என்ன நடந்த்து?

    ‘’இருங்கப்பா! அதான் முதல்லேயே சொன்னேனே---பதட்டப்படக் கூடாதுன்னு.. வசு அவ கூட காலேஜ்லே படிச்ச பையனைக் காதலிச்சிருக்கா!’’---என்று நர்மதா பிள்ளையார் சுழி போட்டதும் சாரங்கனின் படபடப்பு எகிறியது.’’நம்ம வசுவா…..காதலா……???’’---தலை சுத்துவது போல் இருந்தது சாரங்கனுக்கு.

   ‘’மாமா! ரிலாக்ஸ்……ரிலாக்ஸ் ப்ளீஸ்! பையன் அவளுக்கு சீனியர். .எப்படியோ பழகிட்டாங்க.இப்போ அவன் டில்லியிலே ஒரு பெரிய கம்பெனியிலே கை நிறைய சம்பாதிக்கிறான்.’’

    ‘’சரி மாப்பிள்ளை!பையன் நம்மளவன்தானே!’’—என்று தன் சந்தேகத்தை நாசுக்காகக் கேட்டார் சாரங்கன்.

     ‘’அப்படி இருந்தாத்தான் பிரச்சினை இல்லியே.அவன் வேற ஜாதி. ஜாதி வேறங்கிற ஒரு குறையைத் தவிர வேற எந்தக் குறையும் சொல்ல முடியாது.பையன் வீட்டிலேயும் ஓகே வாங்கிட்டாங்க.’’

     ‘’வேற ஜாதிங்கிறதுதான் குறையா?என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றேள்? அதுதானே பெரிய குறை? மத்தபடி நம்ம ஜாதிப்பையனா நீங்க வேற யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் நான் சம்மதிக்கத் தயார். ஆனா இது……..?’’----இப்போது தனக்குள் எழும் உணர்ச்சி கோபமா ……..

 அழுகையா என்பதைக் கூட சாரங்கனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய மூளைப்பகுதிக்குப் போகும் ரத்த ஓட்டத்தின் வேகமே குறைந்து விட்டதோ! சிந்திக்கக்கூட அவரால் முடியவில்லை.

    ‘’ அவசரமில்லை மாமா! நல்லாங்க யோசியுங்க!’’----என்று கூறிய மாப்பிள்ளையைப் பரிதாபகரமாகப் பார்த்தார் சாரங்கன்.

     ‘’மாப்பிள்ளை மொதல்லே இதுக்கு உங்க அப்பா அம்மா சம்மதிப்பாங்களா? ஏன்னா இந்த கல்யாணத்தினாலெ நர்மதாவுக்குக் கஷ்டம் வந்திடப்படாது. எனக்கு மூத்த மாப்பிள்ளையும் சம்மந்திகளும்தான் ரொம்ப முக்கியம்.’’---என்று தளுதளுத்த குரலில் கேட்டார் சாரங்கன்.

    அப்பா பாதி தூரம் வழிக்கு வந்து விட்டாற் போல் பட்டது நர்மதாவுக்கு.

        ‘’எங்கப்பா அம்மாவைப் பத்தி கவலைப் படாதீங்க. அவங்கனாலே எங்களுக்கோ உங்களுக்கோ ஒரு பிரச்சினையும் வராமப் பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு.நீங்க மட்டும் சரின்னு சொன்னா போதும்.!’’

      ‘’முடியலியே மாப்பிள்ளை! எவ்வளவுதான் மனசை திடப்படுத்திக்க முயற்சி பண்ணினாலும் சொந்தம் பந்தம் உறவுகள் எல்லாம் ஒதுக்கிடுமோன்னு ஒரு பயம் உண்டாகுதே!’’--- பரிதாபகரமாக இருந்தது சாரங்கன் நிலை.ஏதோ ஒரு (உறவுப்) பிச்சைக்காரன் போன்ற உணர்வுக்கு ஆட்பட்டான்.

      ‘’அப்பா! நாம கஷ்டப்படறச்சே எந்த ஒட்டும் உறவும் உதவிக்கு வர்ரதில்லே. கல்யாணம்---விக்ஷேம்ன்னாதான் வந்து சாப்பிட்டுட்டுப் போறது மட்டும்தான் இந்தக் கால உறவுகளின் பந்தம்.அவங்களுக்காக நீங்க உங்க மகளை இழந்துடாதீங்க!’’----என்று நர்மதா கூறியதும் அதில் ஏதோ பொடி வைத்துப் பேசுவது போல் உணர்ந்தார் சாரங்கன்.

      ‘’என்னம்மா சொல்றே! என் மகளை இழக்கிறதா? நானா!’’---திகைப்புடன் கேட்டதும் நர்மதா அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்,’’ஆமா!’’

       தொடர்ந்து சொன்னாள்,’’அவள் கட்டிக்கிட்டா அவனைத்தான்  கட்டிப்பாளாம். இல்லேன்னா கல்யாணமே வேண்டாமாம்! இது அவள் எங்க கிட்டே கொடுத்த ஸ்டேட்மெண்ட்!’’ தொடர்ந்து மாப்பிள்ளை சொன்னார்,’’ மாமா! இந்த மட்டுக்கும் அவங்களே கோவிலுக்கோ ரிஜிஸ்டர் ஆபீசுக்கோ போய் கல்யாணம் பண்ணின்டு வந்து நிற்காம---- நம்ம கிட்டே சொல்லி கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்குறாளே அந்த கௌரவத்தை நாம காப்பாத்திக்க வேணாமா? நாம நாளைக்கு மறுத்து அவங்களே கல்யாணம் பண்ணின்டு வந்து நின்னா அந்த அவமானம் யாருக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!’’-

என்று மாப்பிள்ளை கூறி முடிக்கவும், நர்மதா தொடர்ந்தாள் ,’’அதனாலே அப்பா, நாமளே அவளுக்கு அவ இஷ்டப்படியே கல்யாணம் பண்ணி வச்சிர்ரது நல்லதுன்னு எங்களுக்குத் தோணுது!’’

    ‘’அவசரமில்லே மாமா! நல்லா யோசிச்சே முடிவு பண்ணுங்க!’’----என்று மாப்பிள்ளை முடிக்கவும்,

     ‘’அது சரி! இப்போ வசு எங்கே? இன்னும் காலேஜ்லே இருந்து வரலியா?’’—என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார் சாரங்கன்.

     அதுவரை பிரமைப் பிடித்தவள் போல் நின்றிருந்த வாய் திறந்து பதில் கூறும் முன் நர்மதாவே முந்திக் கொண்டாள்.

     ‘’இல்லேப்பா! வசு இன்னிக்கி காலேஜுக்குப் போகலே! காலையிலே நேரா எங்க வீட்டுக்கே வந்துட்டாள். இன்னிக்குப் பூராவும் அவ கல்யாண விஷயமாத்தான் நாங்க மூணு பேரும் விலாவாரியாப் பேசி கடைசியா ஒரு முடிவுக்கு வந்து இப்போ உங்க முன்னாலே நிக்கிறோம். அப்பா! வசு இப்போ உங்க முன்னாலே வர பயப்படறாள். இன்னிக்கி என் கூட இருக்கட்டும். நாளைக்கு நானே அவளை கூட்டிண்டு வர்ரேன். அதுக்குள்ளே----இன்னி ராத்திரிக்குள்ளே அம்மாவும் நீங்களும் கலந்து பேசுங்க. நல்ல முடிவு கிடைக்கும். அப்பா இது உங்க பொண்ணு வாழ்க்கை என்கிறதை மறந்துறாதீங்க!’’---என்று முடித்தாள் நர்மதா.

                                                           ****************

      ‘’ இல்லேங்க……எனக்கென்னமோ இது ஒரு நல்ல சகுனமாத்தான் படுது.!’’

      மாப்பிள்ளையும் நர்மதாவும் விடை பெற்றுச் சென்ற பிறகு சகுந்தலா கொஞ்சம் துணிச்சலுடனும் சிறிதளவு தெளிவுடனும் கணவரிடம் இப்படிக் கூறினாள்.

     ‘’எதுடி நல்ல சகுனம்?’’---குழப்பத்தின் உச்சத்தில் இருந்த சாரங்கன் தளுதளுத்த குரலில் கேட்டார்,. அவருக்கு ‘ஓ’வென்று கதறி அழ வேண்டும் போல் இருந்தது.

    ‘’இல்லேங்க இப்பத்தான் நாம சித்த முந்தி திருவல்லீஸ்வரர் கோவிலுக்குப் போவோம். அப்பவாவது வசுவுக்கு குரு பகவானின் பார்வை பட்டு கல்யாணம் கைகூடாதான்னு பேசி வாய் மூடறதுக்குள்ளே நர்மதாவும் மாப்பிள்ளையும் வந்து வசு கல்யாண விஷயமா ஒரு வழியெக் காட்டிட்டுப் போயிருக்காளே! இது நல்ல சகுனம்…..தெய்வ சங்கல்பம்….இல்லீங்களா? திருவல்லீஸ்வரர் பெயரைச் சொன்னதுமே குரு வருள் கிடைச்சிருச்சே!’’

      ‘’ ஆமாடி! பையன் வேற ஜாதியாமே!’’

      ‘’ உண்மைதான்! இதைப் பார்த்தா….அவ கன்னியாவே இருந்துட்டா… அதை நம்மாளே தாங்க முடியுங்களா?’’

        ‘’ நாளைக்கு வசு வரட்டும் பேசிப்பார்ப்போம்!’’---என்றவர் மறுபடியும் ‘’ ஈஸ்வரா!’’---என்று குரல் கொடுத்தபடி கண்களை மூடினார்.

                                                                        ***********

       மறுநாள் -------

       அக்கா நர்மதாவின் பின்னாலேயே ஒண்டியபடி தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள் வசுமதி.

       ‘’ அப்பா! வசு வந்திருக்கா!’’

       ஈஸிசேரில் அமர்ந்து கண்களை மூடியபடி ஈஸ்வர தியானத்தில் மூழ்கி இருந்த சாரங்கன் கண்களைத் திறந்துப் பார்த்தார்.

    இரண்டு மகள்களும் அவர் முன் நின்றிருந்தனர்.

   இருவரையும் பெற்றவர் அவர்தான். ஆனால் அந்த இருவருக்குள்ளும் தான் எவ்வளவு வேறுபாடு---வித்தியாசம்------!

      வீட்டுக்காரியத்தில் இருந்து---சமையலில் இருந்து----படிப்பில் இருந்து-கல்யாணம் வரை ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் இல்லாமல் அல்லவா இருக்கிறார்கள். இது எப்படி ?

     ‘’உட்காருங்க!’’—என்று இரண்டு மகள்களையும் உபசரித்தவர் உட்பக்கம் திரும்பி குரல் கொடுத்தார்,’’சகு! யார் வந்திருக்கா பாரு!’’

    புடவைத் தலைப்பால் ஈரக்கையைத் துடைத்தபடி சமையல் உள்ளில் இருந்து வந்த சகுந்தலா வசுமதியைப் பார்த்ததும் துக்கம் பீறிட்டு எழ ,’’அடிப்பாவிப் பெண்ணே!’’---என்று கதறியபடி ஓடி வந்தாள்.
     உட்கார்ந்திருந்த வசுமதி அம்மாவைப் பார்த்ததும் எழுந்து நின்றாள். மகளைக் கட்டி அணைத்து கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள் சகுந்தலா. என்னதான் மனதைத் திடப்படுத்திக் கொண்டாலும் அவளால் இந்த்த் துக்கத்தை அடக்கவே முடியவில்லை.

      ‘’அம்மா!அம்மா!இரும்மா! கொஞ்சம் அமைதியாய் இரு. இதுக்குத்தானே நேத்தே உன் கிட்டே அப்படிப் படிச்சிப் படிச்சிச் சொன்னேன்.!’’---என்று கூறிக் கொண்டே அம்மாவையும் வசுவையும் பிரித்துத் தாயின் முதுகில் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து சமாதானப் படுத்தினாள்.

      ‘’பையன் எப்படிம்மா?’’---மகளிடம் நேரடியாகவே விஷயத்துக்கு வந்த சாரங்கன் அந்தக் கேள்வியிலேயே தானும் ஒரு முடிவுக்கு வந்து விட்டதை சூட்சுமமாக உணர்த்தினார்.

    ‘’ரொம்ப நல்லவருப்பா! ஒரு குறையும் இல்லை.; ஒரு கெட்டப் பழக்கமும் அவருகிட்டே இல்லேப்பா! அதோட பியூர் வெஜிடேரியன். அது மட்டும் இல்லேஅவங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு பிராமணாள் குடும்பம் இருக்கு. சின்ன வயசிலே இருந்தே அவங்க வீட்டிலெதான் அதிக நேரம் இருப்பாராம்! அவா கிட்டே இருந்து நிறைய மந்திரம் ஸ்தோத்திரம் ஸ்லோகம்னு என்னவெல்லாமோ கத்துவச்சிருக்காருப்பா!’’   ----தன் காதலனைப் பற்றி மடமடவென்று கூறி வந்தவளைத் தடுத்து, ‘’எல்லாம் சரிதான்மா. ஆனா வேற ஜாதிப் பையன்னு சொல்லும் போது என் மனசு கேட்க மாட்டேங்குதே!’’—என்றார். அவரது குரலே தன் கையாலாகாதத் தனத்துடன் பரிதாபகரமாக ஒலித்தது.

      ‘’அப்பா!’’---என்றாள் வசுமதி.

      ‘’என்னம்மா?’’---என்று கேட்ட தந்தையிடம்,’’அவர் உங்க கூட பேசணும்னு பிரியப்படளார். நீங்க சரின்னா நான் போன் போட்டுத் தர்ரேன். பேசுறேளா?’’---என்று வசுமதி கேட்டதும் ரொம்பவே தயங்கினார் சாரங்கன். இன்னும் அவரால் ஒரு இறுதி முடிவுக்கு வர முடியவில்லை. இந்தச் சூழ் நிலையில் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?

       அப்பாவின் தயக்கத்தை நர்மதா புரிந்து கொண்டாள்.

       ‘’போன்லெ தானேப்பா பேசப்போறீங்க! பேசித்தான் பாருங்களேன்! ஒரு வேளை இந்தப் பேச்சிலே உங்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கலாம் இல்லையா?’’---என்று நர்மதா கூறியதும்,’’ அப்படியா சொல்றே! சரிம்மா…. போன் போட்டுக்கொடு!’’—என்று சாரங்கன் அனுமதித்ததும் வசுமதி மனதில் கொஞ்சம் மகிழ்ச்சி கிளுகிளுத்தது.

       தன் செல்போனை எடுத்து நம்பரைத் தட்டினாள்.ஹாலோவினாள். எதிர்முனை குரலிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு போனைத் தந்தை யிடம் கொடுத்தாள்.

      எதிர் முனையில் இருந்து நெடுநேரம் பேசினாலும் இங்கே சாரங்கன் வெறுமே ‘’உம்’’ கொட்டிக்கொண்டிருந்ததால் அவர்களின் உரையாடலை மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

     அந்த மாப்பிள்ளைப் பையன்---பெயர் ஸ்ரீநாத். கடைசியில்,’’ சார், நீங்க கல்யாணத்துக்கு எதுவும் செலவு பண்ண வேண்டாம்! நாங்களே ஐம்பது பவுன் நகை போட்டு எங்க செலவிலேயே பெரிய கல்யாணமகாலில் நல்ல முறையிலேயே கல்யாணம் பண்றோம்! நீங்க வந்திருந்து கன்னிகாதானம் மட்டும் பண்ணிக்கொடுத்தா போதும்.!’’—என்று கூறியது அந்தச் சூழ்நிலையில்---அவரது ஏழ்மை நிலையில் ரொம்பவும் பிடித்திருந்தது. என்றாலும் பிடிகொடுத்துப் பேசாமல்,’’நாளைக்கு என் முடிவைச் சொல்றேனே!’’—என்று கூறி கைப்பேசி பேச்சை முடித்துக்கொண்டார்.

        மனைவியிடம் மாப்பிள்ளைப் பையன் ஸ்ரீநாத் சொன்னதை எல்லாம் விலாவாரியாகச் சொல்லி அவன் கடைசியாகச் சொன்ன முக்கிய மான விஷயத்தையும் அழுத்தமாகக் கூறி முடித்து, நீ என்ன நினைக்கிறே? –என்று கேட்டார்.

        ‘’இப்போதைக்கு எனக்கு என் மகளுக்குக் கல்யாணமானாப் போதும்.!’’

      ‘’ நாம சம்மதிச்சிட்டா பையனோட அப்பா,அம்மா,மாமா—எல்லாம் பெண் கேட்க வருவாளம்! கல்யாணம்கூட நம்மவங்க மாதிரியே நம்ம சாஸ்திரியெ வச்சே செஞ்சுக்கலாம்னு அவர் சொல்றார்!’’

     அதுக்கு முன்னாலே நம்ம சம்மந்தி நர்மதாவோட மாமனார் மாமியார் கிட்டேயும் சம்மதம் வாங்கிடலாம்க!’’

    ‘’அவசியம். இன்னிக்கு சாயந்திரமே போவோம்! நர்மதா நீ உன் மாமியார் வீட்டுக்குப் போய் விஷயத்தை சொல்லி வை. சாயங்காலம் நாங்க வர்ரோம்.!’’

     ‘’சரிப்பா! அவரு ஏற்கனவே அவங்க கிட்டே விஷயத்தைச் சொல்லி சம்மதிக்க வச்சிட்டாரு. நீங்க சாயந்திரம் வர்ர தகவலை மட்டும் நான் போய்ச் சொல்லிடறேன்.!’’---என்றாள் நர்மதா.

                                                                              *************

        கல்யாண வேலைகள் ஜரூராக ஆரம்பமாயிற்று.எல்லா வேலைகளை மாப்பிள்ளை வீட்டாரே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ததால் சாரங்கன் தம்பதிகளுக்கு சொந்தக்காரர்  வீடுகளுக்குப் போய் பத்திரிகை வைக்கும் வேலை மட்டும் இருந்தது.

      பலர் முறுக்கிக் கொண்டார்கள். சிலர்----‘’காலம் போற போக்கு’’ என்று தங்களுக்குத் தாங்களே சமாதானப் படுத்திக் கொண்டார்கள்.

     ஒரு பெரிய கல்யாண மகாலில் நல்லதொரு சுபயோக சுபதினத்தில் ஸ்ரீநாத்---வசுமதி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பைசா உதவிகூட செய்ய மறுத்த தம்பியர் இருவரும் முறுக்கிக் கொண்டு கல்யாணத்திற்கு வரவில்லை. அதனால் நிகர நஷ்டம் அவர்கள் மொய் எழுதும் ரூபாய் 500+500=ரூ1000. மற்றபடி உறவுகளில் எல்லோரும் வராவிட்டாலும் சிலர் வந்திருந்தனர்.

      அமோகமாக நடந்துகொண்டிருந்த கல்யாணத்தின் போது சாரங்கன் தன் நெருங்கிய நண்பர்களிடம் கூறிக்கொண்டு இருந்தார்,------

      ‘’இன்னாருக்கு இன்ன இடத்தில் பிறக்க வேண்டும் என்ற பிறப்பு நம் கையில் இல்லை. இன்ன வயதில் இன்ன இடத்தில் சாக வேண்டும் என்ற இறப்பு நம் கையில் இல்லை. ஆனால் இன்னாரைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுச் சுதந்திரத்தை மட்டும் கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். அந்தச் சுதந்திரத்தைத்தான் என் இரண்டாவது மகள் பயன் படுத்திக் கொண்டாள்.

       ‘’இதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!’’

       தத்துவ மழை பொழியும் சாரங்கனை வியப்போடு பார்த்தார்கள் நண்பர்கள். இதுதானய்யா மனிதம்!!!!

                                                                    ************

No comments:

Post a Comment