இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

சம்பந்தி

        பிரதீபிற்கு மன உளைச்சல் அதிகமாயிற்று. அவனது தந்தை கோபக்காரப் பேர்வழி. அப்பா என்றாலே அவனுக்கு அப்படி ஒரு பயம்.; சிம்ம சொப்பனம். அவனது தேவை எதுவானாலும் தாயின் வழியாகத்தான் தந்தையிடம் தெரிவிப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

         போதாக்குறைக்கு அவனது தந்தையின் முகத்தில் இதுவரை யாரும் சிரிப்பின் நிழலைக் கூடப் பார்த்ததில்லை. அப்படி ஒரு கடுகடுப்பு; சிடுசிடுப்பு.

       ஆனால் இந்த விஷயத்தை அம்மா மூலமாக அப்பாவிடம் தெரிவிக்க முடியாது. தானே நேரடியாகத் தெரிவித்தாக வேண்டும்.

       அப்படிச் சொன்னால்----------

      அவனால் நன்றாகவே கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

      தோளுக்கு மீறிய மகன் என்றும் பாராமல்----எம்.சி.ஏ. முடித்து கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருடன் நிற்கும் மகன் என்று கூடப் பாராமல்-----------

       விஷயத்தைச் சொன்ன நொடியே ‘’பளார்’’ என்று கன்னத்தில் ஐந்து விரல்களையும் பதித்தாலும் ஆச்சரியம் இல்லை! அவர் அப்படி செய்யா விட்டால்தான் ஆச்சரியம்.

       அதற்காக இனியும் தயங்கிக் கொண்டிருக்க முடியுமா?
      எச்சிலை விழுங்கினான்.; நெஞ்சில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டான். தந்தையின் அறைக்குள் நுழைந்தான். கனகசபாபதி தன்முன் மேஜைமேல் உள்ள பேரேட்டில் கணக்கு வழக்குகளை எல்லாம் ஆய்ந்து கொண்டிருந்தார்.

      ‘’அப்பா!’’

      பக்கத்தில் போய் நின்ற பிரதீப் இப்படி அழைத்தான். ஆனால் அவனது அழைப்புத் தொனி அவனது காதில் கூட விழவில்லேயே! கனக சபாபதிக்கு எப்படி கேட்டிருக்கும்? இருந்தாலும் தன் அருகில் யாரோ வந்து நிற்பது போன்ற உணர்வு உந்த திரும்பிப் பார்த்தார்.

பிரதீப் நின்று கொண்டிருந்தான்.

   ‘’என்னடா! எப்போ ஜாயிண்ட் பண்ணனும்? எங்கே பெங்களூரா –சென்னையா?’’----என்று மகன் ஏதோ தன் வேலை விஷயமாய் பேச வந்திருப்பான் என்ற நினைப்பில் கேள்விகளை அள்ளி வீசினார். ஆனால் அவன் சொல்ல வந்தது தன் காதலைப் பற்றி…….அதுவும் கறாரே உருவான அப்பாவிடம்! அதனால்தான் எப்படி சொல்வது என்ற தயக்கத்தில் அல்லாடு கிறான்.

       ‘’அதில்லைப்பா……நான் உங்க கிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும். என் ப்ரைவசி மேட்டர்.!’’

         இதைச் சொல்லி முடிப்பதற்குள் அல்லாடிப் போய் விட்டான் பிரதீப்.

         மகனை ஏற இறங்கப் பார்த்தார் கனகசபாபதி.’’ இதுவரை இப்படித் தன்னிடம் வந்து நேரிடையாகப் பேசாதவன் இப்போது வந்திருக்கிறான் என்றால் ஏதோ விஷயம் இருக்க வேண்டும்’’ என்று மனதிற்குள் கணித்துக் கொண்டவர் அருகில் இருந்த நாற்காலியைக் காட்டி,’’ உட்கார். உட்கார்ந்து உன் மனசிலே இருக்கிறதைச் சொல்லு!’’—என்று சர்வசாதாரணமாகப் பேசிய தந்தையைப் பிரதீப் வியப்புடன் பார்த்தாலும்,’’அமைதிக்குப் பின் புயலும் சூறாவளியும் சுழன்றடிக்க ஆரம்பித்து விடுமோ’’—என்று முன்னை விட அதிகமாகவே பயந்துத் தயங்கியபடி அவர் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்தான்.

          ‘’அப்பா!’’

        ‘’ம்ம்……சொல்லு!’’

        ‘’இல்லேப்பா!......காலேஜ்லே என் கூடப் படிக்கிற ஒரு பொண்ணை நான் காதலிக்கிறேன்பா அவளைத்தான் கட்டிக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நீங்க கோவிச்சுக்காம எங்களை சேர்த்து வைக்கணும்.!’’—என்று பிரதீப் முழு செய்தியையும் சொல்லி முடிப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டான். இதயம் இன்னும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. கார்டியோ மருத்துவர் மட்டும் இப்போது இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் அவனை உடனே ஐ.சியு. வில் சேர்க்க சிபாரிசு செய்திருப்பார். அப்படித் தாறுமாறாக இதயத் துடிப்பு அல்லாடியது.

          அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட கனகசபாபதி மகனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

          அறை வாங்கக் கன்னத்தைத் தயாராக வைத்திருந்தான் பிரதீப்.
         கனகசபாபதி கேட்டார்,’’பொண்ணு பேரென்ன?’’

        ‘’அப்பா……அது வந்து……’’---பெயரைச் சொல்லவே ரொம்பவும் தயங்கினான் பிரதீப். பெயரில் அப்படி என்ன சூட்சுமம் இருக்கிறது.? பிரதீப் சொன்னான் பெயரை,-----

          ‘’மும்தாஜ்!’’

           எதிர்பார்த்தது அல்ல…….;எதிர்பாராதது நடந்தது. கனகசபாபதியிடம் எந்த ஒரு சலனமும் தென்படவில்லை. தொடர்ந்து கேட்டார்,’’ இஸ்லாமியப் பெண்ணா? அவங்க வீட்டிலே சம்மதிப்பாங்களா?’’

          கனகசபாபதி இப்படி கேட்டதும் பிரதீப் அதிர்ந்தே போய் விட்டான்.என்றுதான் சொல்ல வேண்டும். அவன் தந்தையிடம் இருந்து எதிர்பார்த்த கோபம்…ஆங்காரம் எதுவும் இல்லையே! ஏதோ ‘’உளுந்தம் பருப்பு கிலோ என்ன விலை?’’—என்று கேட்பது போல் அல்லவா சர்வ சாதாரணமாய்க் கேட்கிறார்.

          ‘’தெரியலேப்பா!!அவளும் இன்னிக்கி அவங்கப்பா கிட்டே பேசிட்டு எனக்கு போன் பண்றேன்னு சொல்லியிருக்கா!’’

          ‘’சரிப்பா! அவங்க வீட்டிலே சம்மதிச்சா எனக்கொன்னும் ஆட்சேபம் இல்லை..பையன் வீட்டு சம்மதத்தை விட பொண்ணு வீட்டு சம்மதம்தான் ரொம்ப முக்கியம். ஏன்னா தன்மகள் வாழப் போற இடத்தை பத்தி அவங்க அப்பா அம்மா நிறைய கனவு கண்டிருப்பாங்க இல்லே!’’

          அமைதியாகப் பேசிய தந்தையை மலங்கமலங்கப் பார்த்த பிரதீபால் நம்பவே முடியவில்லை. மலையாக நினைத்த காரியம் கடுகாகி விட்டதே! உணர்ச்சிவசப் பட்ட பிரதீப் தன் வாழ்விலேயே முதன் முறையாக,’’அப்பா!’’ ஓங்கிக் குரல் கொடுத்தபடி தந்தையின் கால்களில் விழுந்து விட்டான்.

        ‘’ எந்திரி, இதை எல்லாம் கல்யாணத்தப்போ பார்த்துக்கலாம். மொதல்லெ…அந்தப் பொண்ணு…..பேரென்னா? மும்தாஜ்ஜா! அவளுக்கு போன் போட்டு விசாரிச்சி சொல்லு!’’---என்று கூறி மகனைத் தட்டிக் கொடுத்து அனுப்பிய கனகசபாபதி கணக்குப் பேரேட்டை மூடி விட்டு ---நாற்காலியில் இசைவாகச் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டார்.

                                                          ***********

        ந்திப்படக் கதாநாயகி போன்ற முகத் தோற்றமும்---தொட்டாலே ரத்தம் பீறிட்டு அடிக்குமோ என எண்ணச் செய்யும் சிவந்த மேனியும்---மொத்தத்தில் அழகே வடிவான---இளமையின் தலை வாசலில் நிற்கும்----

        ஜிகினிபேகம் அவர் கண் முன் வந்து நின்று மனதை கிளுகிளுப் பூட்டும் சிரிப்பு சிரிக்க------

        சிலிர்த்துப் போனார் கனகசபாபதி! ஆம், அவர் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த கட்டழகிதான் ஜிகினிபேகம்

        பார்வை பேச்சாகி பேச்சு காதல் மூச்சாகி----நீயின்றி நான் இல்லை-நானின்றி நீ இல்லை—என்ற அன்னியோன்ய நிலைக்கு ஆளாகி---ஆனாலும் காதலைப் பெற்றோரிடத்தில் சொல்ல மிகவும் பயந்து பிரிந்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன் காதல் என்றாலே சினிமாவுடனும் பத்திரிக்கை கதைகளுடனும் நிறுத்திக் கொண்ட சமூகம் நம் சமுகம். அதுவும் வெவ்வேறு மதங்கள் என்றால் சான்ஸ்ஸே இல்லை.

        கனகசபாபதி பெற்றோர் பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டாலும் பல வருஷங்கள் ஜிகினிபேகத்தின் நினைவும் தோற்றமும் நெஞ்சில் நின்று ரணகளமாக்கிக் கொண்டிருந்தன. பயத்தில் தன் காதல் ஊமைக் காதல் ஆகி  விட்டதே என்ற ஆதங்கம் இன்று வரையும் அவருக்கு உண்டு. இந்த நிலையில் பிரதீப் வந்து காதலைச் சொன்னதும்--- அதுவும் பெண்ணின் பெயரைச் சொன்னதும் கனகசபாபதிக்குப் பாவபரிகாரம் செய்யும் ஒரு வாய்ப்பை இறைவனே தனக்கு அளித்து விட்டதாக மனம் குளிர்ந்தார். அதனால்தான் அட்டியின்றி தன் சம்மதத்தை உடனே சொன்னார். என்றாலும் இன்னும் மகனிடம் கூடத் தன் காதல் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் துணிவு அவருக்கு வரவில்லை.

                                                        ***********

           அடேங்கப்பா! என்ன ஒரு மகிழ்ச்சி பிரதீப்பிற்கும் மும்தாஜ்ஜுக்கும். தங்கள் காதலுக்கு இருதரப்பிலிருந்தும் இப்படி ஒரு அட்டியில்லாத ஒப்புதல் கிடைக்கும் என்று அவர்கள் கனவு கூட கண்ட தில்லை. பெண் வீட்டார் மட்டும் அல்ல கனகசபாபதியின் மனைவி அம்புஜம் கூட அல்லவா பச்சை கொடி காட்டி விட்டாள்.

          சாதாரணமாகத் தாய்மார்களிடையே தோன்றக் கூடிய தயக்கம் ,’’இருப்பது ஒரே மகன்---வரப்போவதும் ஒரே மருமகள் அவளும் வேற சாதி மதம் என்றால்….நாலு இடத்துக்கு மருமகளைக் கூட்டிட்டுப் போகமுடியுமா? என்பது.அப்படி ஒரு தயக்கமும் இன்றி அவள் வேகமாகத் தலையசைத்தது தெய்வாதீனமா அல்லது-------

        சம்பிரதாயத்துக்காகப் பெண் பார்க்க என்று ஒரு நாளைக் குறிப்பிட்டு அறிவித்தும் விட்டார் கனகசபாதி.

       அன்றையதினம் தம்பதி சமேதரராய் மகனை அழைத்துக்கொண்டு சின்ன சொக்கிக்குளத்திற்குக் காரில் பயணப் பட்டனர் கனகசபாபதி தம்பதி.
       ‘’வாங்க,வாங்க!’’—என்று வரவேற்ற மும்தாஜின் தந்தை சுலைமான் அவர்களை ஹாலில் உள்ள சோபாவில் அமர்த்தி விட்டு,’’ ஜிகினிம்மா!’’ என்று உட்பக்கம் நோக்கிக் குரல் கொடுத்தார்.

       குளிர் பானங்களைத் தட்டில் வைத்துக் கொண்டு மும்தாஜ் முன்னே வர அவள் பின்னே வந்தவள்------

       கனகசபாபதி உண்மையிலேயே திடுக்கிட்டு விட்டார்.அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நிகழ்ச்சி. கதையில் கூட இப்படி ஒரு சம்பவம் வருமா என்ன?

       மும்தாஜின் பின்னால் வந்தவள் அவளது தாய் ஜிகினிபேகம்; கனகசபாபதியின் முன்னாள் காதலி.

       ‘’நல்லா இருக்கீங்களா?’’---பழைய புன்முறுவல் மாறாமல் அதே அழகு முகப் பொழிவுடன் ஜிகினிபேகம் கேட்டதும் கனகசபாபதி தடுமாறி விட்டார்.

       ‘’ இருக்கேன்…இருக்கேன்…!’’---எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு விடுமோ என்ற பதட்டத்தில் வேகமாகப் போய் ஏறும் பயணிபோல் பதட்டத்துடன்
வேகமாகத் தன் பதிலை அடுக்குச் சொல்லாக்கினார்.

        சுலைமான் அருகில் உட்கார்ந்து கொண்டே ஜிகினிபேகம் சொன்னாள்ய’’ மும்தாஜ் விஷயத்தைச் சொல்லும் போதே உங்களைப் பத்தியும் உங்க பேரையும் சொன்னாள். அப்பவே நான் அது நீங்களாகவே இருக்கனும்னு நினைச்சேன்! அப்படி இருந்து இந்த சம்பந்தம் அமைஞ்சா மனசுக்கு ஒரு திருப்தி ஏற்படும் போல இருந்தது. இன்ஷாஅல்லா! நான் ஆசைப் பட்டதை வேறு வரு வழியிலே அல்லா பூர்த்தி பண்ணி நம்மை சம்மந்தி ஆக்கிட்டார்.!’’

        ஜிகினிபேகம் பேசப்பேச பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தார் கனக சபாபதி. சுலைமானோ---எதையும் செவிமடுக்காமல்—யாரையும் கவனிக்காமல் அம்புஜத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அம்புஜமோ மனம் திக்திக் என்று அடிக்க தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

       ஆம்!

      ஒரு பரமரகசியம்!

     அந்த காலத்தில் சுலைமானும் அம்புஜமும்கூட காதலர்களாக இருந்து காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தவர்கள்தான்! இது எதுவும் தெரியாத மும்தாஜ் தன் வருங்கால மாமியாரிடம்,’’ எடுத்துக்கோங்க அம்மா!’’---என்று அந்த குளிர்பான தட்டை நீட்ட---மருமகளை ஏறிட்டுப் பார்த்த அம்புஜத்தின் விழிகளில்------------

      நீர்த்திவலைகள் எட்டிப் பார்த்தன.

     இனி அவர்கள் சம்பந்திகள்!!!

1 comment:

  1. என்னம்மா யோசிக்கிறீங்க...!!!

    காலம் எப்படியெல்லாம் மக்களையும் உறவுகளையும் மாற்றி விடுகிறது....!

    ReplyDelete