இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

விதைத்தது விளைந்தது

                   நான் சொல்லப் போவது ரொம்ப பழைய சமாச்சாரம்.என் தாத்தாவைப் பற்றிய செய்தி.ராதாகிருஷ்ணய்யர்  என்ற பெயரைக் கேட்டாலே கை எடுத்து கும்பிடுவார்கள்.அப்பேர்பட்ட ஆசார சீலர்;பக்திமான்.நல்ல செல்வந்தரும்கூட

                அந்த காலத்திலேயே இரண்டு தியேட்டர்களைப் பங்குதாரர்களுடன் நிர்வகித்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

                         என்ன இருந்து என்ன? விதி என்ற ஒன்று இருக்கிறதே!அது சரியான அளவில் அமைந்தால்தானே வாழ்க்கை ருசிக்கும்.

                         என் தாத்தாவுக்கு அது சரியானபடி அமையவில்லை என்பதுதான் என் அபிப்பிராயம்.ஒரு பழமொழி சொல்வார்களே,'ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்'என்று அதையும் விஞ்சியவர் என் தாத்தா.

                         ஐந்தல்ல;ஏழு பெண்களையும்-மூன்று ஆண்களையும் பெற்று வளர்த்தவர்.

                         ஏழு பெண் குழந்தைகளையும் தங்கமும் வைரமுமாய்ப் பூட்டி வெள்ளியும் வெண்கலமுமாய்ச் சீர் செய்து நல்ல படியாகத்தான் கல்யாணம் செய்து வைத்தார்.

                         நாம் எல்லாவற்றையும் நல்லதாகவே நினைக்கிறோம்;நல்லதாகவே செய்கிறோம்;ஆனால் ஆண்டவன் விதித்த விதி  என்ற ஒன்று இருக்கிறதே!

                        என் தாயார்தான் மூத்த பெண்; எனவே பார்த்துப் பார்த்துத் தேடித்தேடி பெரிய இடத்துச் - செல்வந்தர் வீட்டுப்  பையன் என்று என் தந்தையைத் தேடிப் பிடித்துத் தன் மகளை மணமுடித்து வைத்தார்.இப்படிச் சொல்வதை விட அவஸ்தையை--

            வேதனையைத் தேடிப் பிடித்துத் தன்மகளுக்கு மணாளனாக்கினார் என்பதுதான் சரியாக இருக்கும்.

                       என் தந்தை முரட்டு ஆசாமி - முன் கோபத்தில் துர்வாசரையே ஏன் என்று கேட்பவர்.பிடிவாத்த்தில் அவருக்கு  உதாரணமாகக் காட்ட அவரது குணத்தைத் தவிர இன்னொன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை!

                       திருமணமான இரண்டே ஆண்டில் - அதாவது எனக்கு இரண்டு வயதாகும் போதே காரணம் தெரியாத காரணத்திற்காக மாமனார் வீட்டு உறவை முறித்துக் கொண்டவர்--தான் சாகும்வரை - (எனக்கு ஐம்பத்தெட்டு வயதாகும் வரை)மாமனார் வீட்டு   உறவே இன்றி வாழ்ந்து செத்தார்.இதில் பெரிய கொடுமை என்னவென்றால் என் தாத்தா காலமான போதுகூட என் தாயாரைக்  கடைசி கடைசியாகக்கூடத் தன்னைப் பெற்ற தந்தையின் முகத்தைக் கூடப் போய்ப் பார்க்க அனுமதிக்காத அரக்க நெஞ்சினராக        இருந்தார்.ஒரு மகன் -அவரது ஒரேஒரு மகன் -இப்படிச் சொல்கிறேன் என்றால் நானும் என் தந்தையிடம் எத்தனை துன்பங்களை
அனுபவித்து இருப்பேன்.அது தனிக்கதை. அதைத் தனியாக வேறொருமுறை சொல்லுகிறேன்.இப்போது விஷயத்துக்கு வருவோம்.

                      என் தாத்தாவுக்கு ஏழு பெண்கள் மூன்று பையன்கள் என்று சொன்னேன் அல்லவா? இதில் மூத்த மகளான என்  தாயாரின் வாழ்க்கையைத்தான் விதி சின்னாபின்னமாக்கியது என்றால் என் தாத்தாவின் மூத்த மகனான ராமமூர்த்தியுடனும்

         அந்த விதி படுகோரமாக விளையாடி விட்டது.ஆம்-----

                       என் மாமா இன்றைய பாஷையில் சொல்ல வேண்டுமானால் அவர் ஒரு மாற்றுத் திறனாளி.அதை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரிய வில்லை.அவரது கை கால்களைத் தனது இஷ்டப்படி எல்லாம் வளைத்து நெளித்து ஒரு கோரமான -

       பரிதாபகரமான உருவத்தை உருவாக்கி வேடிக்கை பார்க்க நினைத்தான் சரஸ்வதிமணாளன்.அந்தப் படைப்பின் துன்ப உயிர்தான் என்மூத்த மாமா ராம்மூர்த்தி. எப்படி இருக்கும் என் தாத்தாவுக்கு?என்னாலேயே இப்போது நினைத்தாலும் தாங்க முடியவில்லையே.

       ஆனால் அப்போது அவர் தாங்கினார். தொடர்ந்து ----

                      இரண்டாவது மகன் கோபால் செக்கச்செவேல் என்று அழகாக ராஜா மாதிரி இருப்பார்.கடைசி மகன் ராம்லால்.

                      இதில் விஷயம் என்னவென்றால் என் தாத்தாவின் அண்ணனுக்கு மணமாகி ஆண்டுகள் பல கடந்தும் ---

        செல்வங்கள் பல குவிந்து இருந்தும் --அந்த ஆண்டவன் குழந்தை பாக்கியம் மட்டும் அவருக்கு தரவில்லை.எனவே அவர்

        தன் தம்பியான என் தாத்தாவிடம் அவரது இரண்டாவது மகனான கோபாலைத் தான் சுவிகாரம் எடுத்துக் கொள்வதாகவும்  பதிலுக்கு இப்போது என் தாத்தா வசித்துக் கொண்டிருக்கும் வீட்டின் தன் பாதிப்பங்கை அவருக்கே விட்டுக் கொடுப்பதாகவும்   கூறினார்.

                       நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, 'என் தாத்தா தயாள சிந்தையும் இரக்க சுபாவமும் நிறைந்தவர்'   என்று.மேலும் ஏழு பெண்களுக்குத் திருமணமும் முடித்து பெரும் செல்வம் கரைந்த நிலையில் தன் அண்ணனின் டீலுக்கு ஒப்புதல் அளித்தார்.

                       பாவம் என் தாத்தா!

                       தன்னை லட்சுமணனாகவோ பரதனாகவோ பாவித்துக் கொண்டவர் தன் அண்ணன் ராமராகவே இருப்பார் என்று நம்பி விட்டார்.எனவே அவரது வாய்மொழி ஒன்றை மட்டுமே வேதவாக்காக நம்பி தன் அருமந்த மைந்தனான

        கோபாலை அவருக்கு சுவிகாரமாகக் கொடுத்து - தான் இருக்கும் தன் முழு வீடும் தனக்கே சொந்தமாகி விட்டதாக நம்பிக்   கொண்டிருந்தார்.

                       கடவுளிடமே ஒப்பந்தம் செய்து கொள்வதானாலும் அதை முறைப்படி-- சட்டப்படி-- எழுத்துப் பூர்வமாக செய்து கொள்வது ஒன்றே புத்திசாலித்தனம் என்பது அனுபவ உண்மையாயிற்று.

                        அந்த புத்திசாலித்தனம் என் தாத்தாவிடம் இல்லை. விளைவு -----

                        சுவிகாரம் கொடுக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பின் என் தாத்தாவின் அண்ணன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் மனசாட்சியைக் காலத்துக்கு கடனாகக் கொடுத்து விட்டு வீட்டின் தன் பங்கான பாதி பாகத்தை உடனே பிரித்து தருமாறு கேட்டதும்---

                        என் தாத்தா பட்ட அவஸ்தையை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா?

                        வேண்டியவர் வேண்டாதவர்; தெரிந்தவர் தெரியாதவர் என்று எத்தனையோ பேர் வந்து பஞ்சாயத்து செய்தும் அவரது அண்ணனின் விடிவாதம் மாறவில்லை; அதன் விளைவு----

                        வக்கீல் நோட்டீஸ் நீதிமன்ற அலைக்கழிப்பு.........

                        பாவம் தாத்தா!

                        வாய்மொழிக்கு ஆதாரம் இல்லாததால் என் தாத்தாவின் வாதம் சட்டத்தின் முன் தலைகுனிந்தது.இல்லை--

                       சத்தியம் தலை குனிந்தது.

                       விளைவு-----

                       என் பாட்டிவீடு--அழகான--விஸ்தாரமான அந்தப் பெரிய வீடு--இரண்டு பங்காகப் பிரித்து நடுவில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது.

                       ஆம்!கடவுளின் கருணை 'காணவில்லை'--என்ற விளம்பரப் பகுதியாயிற்று.அந்த ஆண்டவனின் கருணையை காவல் நிலையத்தில் FIR போட்டுத் தேடத்தான் வேண்டும் போலும்.

                        இது ஒரு புறம் இருக்க---

                        என் தாத்தாவின் அண்ணன் அண்ணி காலமான பிறகு சுவிகாரம் சென்ற என் மாமா ஏதேதோ தொழில்களில் ஈடுபட்டு--நண்பர்களால் ஏமாற்றப் பட்டு--செல்வங்களை அநியாயத்தில் கரைத்து என் தாத்தா வீட்டில் தான் பங்காகப்   பெற்ற பகுதியையும் விற்று விட்டார்.

                        அவரும் காலமான பின் அவரது மகன் சுகவாசியாக வாழ்ந்து இருந்த வீட்டையும் பிற சொத்துகளையும் விற்று இன்று வாடகை வீட்டில் வாழ்கிறார். ஆனால்----

                        இவர்களால் வஞ்சிக்கப்பட்ட என் தாத்தாவின் கடைசி மகன் தன் சொந்த வீட்டில் நிம்மதியாக இருக்கின்றார்.தன் இரு மகன்களுக்கும் நல்ல முறையில் திருமணம் முடித்து ஒரு மகன் தந்நையுடன் இருந்து சுயதொழிலில் ஈடுபட்டு

       ஓஹோ என்று வளர--இன்னொரு மகன் அமெரிக்காவில் ஆஹா என்று வாழ----

                        இங்கே சத்தியம் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பிழைக்கத் தொடங்கியது.

                        ஆம்------

                        விதைத்தது  விளைந்தது !

No comments:

Post a Comment