இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

இனி மெல்லச் சாகும் சிறுகதை இலக்கியம்

 சிறுகதை என்பது ஒரு சுவையான தின்பண்டம் மட்டும் அல்ல.ஆரோக்கியமான உணவும்கூட. சங்க இலக்கியங்களான அகநானூறு,புறநானூறு போன்றவற்றின் பல பாடல்கள்  சிறுகதை இலக்கிய சாதியைச் சார்ந்துள்ளமையை பல அறிஞர்கள் பல் வேறு காலகட்டங்களில் சுட்டிக்காட்டி உள்ளனர். எனினும் அவை செய்யுள் வடிவில் பண்டிதர் மட்டுமே சுவைக்கும் தன்மையன.

            பின்னர் ஆங்கில இலக்கிய அடிச்சுவட்டை ஒட்டி உரைநடையிலும் சிறுகதைகள் மலரத் தொடங்கின. நகைச்சுவை,அவலச்சுவை என பல் வேறு முகங்களைக் கொண்ட அற்புதச் சிறுகதைகள் தமிழ் எழுத்தாளர்களால் படைத்தளிக்கப் பட்டமை இன்று ஒரு கனவு போல் மங்கலாகத் தோற்றம் அளிக்கின்றன.

            மணிக்கொடி காலத்தில் அற்புத வளர்ச்சி பெற்ற சிறுகதைகள் பின்னர் ஆனந்த விகடன்,கல்கி,குமுதம்,கலைமகள்,அமுதசுரபி போன்ற பல ஜனரஞ்சக பத்திரிகைகளால் கொப்பும் கிளையுமாய் செழித்து வளர்ந்த காலம் ஒன்று உண்டு.

           1950--60 களிலும் அதற்கு முன்னும் ஒவ்வொரு வார இதழும் குறைந்தது ஆறு சிறுகதைகளையாவது தமது பத்திரிகைகளில் இடம் பெறச் செய்தனர். அத்துடன் இரண்டு தொடர் கதைகள் வேறு.அதில் ஒரு சரித்திரகதையும் இடம் பெறுவதுண்டு. இதன் மூலம் ஏராளமான சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றி அதி அற்முதமான காலத்தையும் வென்று காட்டும் சிறுகதைகளைப் படைத்தளித்தனர்.

            இது இன்று கதையாய் பழங்கனவாய்ப் பாழ்பட்டு போனது ஏனோ?

            இன்றையமுக்கிய-முதன்மை - No1 - வார இதழ்களை எடுத்துப் பார்த்தால் ஒரு பக்கக்கதை என்ற பெயரில் ஒரு மூன்று துணுக்குக் கதைகள் - உடன் போனால் போகட்டும் என்ற ஒரு அனுதாபத்தில் யாராவது ஒரு பிரபல எழுத்தாளரின் ஒரேஒரு சிறுகதை...மற்ற பக்கங்கள் எல்லாம் நகைச்சுவை துணுக்குகளும்-- சினிமாக்களும் ஆக்கிரமித்து சிறுகதை இலக்கியத்துக்கே சாவு மணி அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.பிரபல வார இதழ்கள் ஒரு சிறுகதைக்கு மேல் வெளியிடுவதில்லை என கங்கணம் கட்டிக் கொண்டு செயல் படுவதுபோல் எனக்குத் தோன்றுகிறது.

           தொடர்கதையா...அப்படி என்றால் என்ன என்று கேட்கும் காலம் நெருங்கி விட்டது.நாள் இதழ்களின் இலவச இணைப்பான வாரமலரும்--தினமணிகதிரும் இரண்டு மூன்று சிறுகதைகளைத் தவறாமல் வெளியிடும் நிலையில் பிரபல வார இதழ்களும் ஐந்தாறு சிறுகதைகளை வெளியிட்டு ICU வில் மல்லாந்து கிடந்து ஆக்ஜிசன் ஏற்றப் பட்டுக் கொண்டு இருக்கும் சிறுகதை இலக்கியத்தைக் காக்க முன் வருவார்களா?

          முன்பெல்லாம் வெளி உலக எழுத்தாளர்களின் படைப்புகளையே மிகுதியும் வெளி யிட்டு பற்பல புது எழுத்தாளர்களை உருவாக்கி--இலக்கியத் தொண்டாற்றிய பிரபல No1- வார  இதழ்கள் இப்போது ஒன்றிரண்டு வெளியுலக எழுத்தாளர்களின் படைப்பிற்கு மட்டுமே இடம் அளித்து விட்டு ஆசிரியர் குழு நிருபர் குழுவினரின் எழுத்துகளால் பத்திரிகையை நிரப்பிக் கொண்டிருந்தால் புதுப்புது எழுத்தாளர்களும் நவீன இலக்கியங்களும் தோன்றுவது எப்படி?

           ICU வில் இருக்கும் சிறுகதை இலக்கியம்--- பிரபல வார இதழ் ஆசிரியர்கள் மனம் வைத்தால் நலம் பெற்று மீண்டும் பவனி வரும். இல்லையேல் ICU to கல்லறைதான்.

           நாமெல்லாம் கொஞ்சம் யோசிப்போமே!

No comments:

Post a Comment