இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Monday 9 June 2014

இழப்பு

                 பாராங்குசம் அறையில் அமர்ந்து சிகரட் புகையைக் கக்கித் தன் நுரையீரலைப் பாழடித்துக் கொண்டிருந்தான்.

               அப்போது சோகம் வழியும் முகத்துடன் அறைக்குள் பிரவேசித்தான் பிரபாகரன்.

               ''என்ன பிரபா,சாப்பிட்டாச்சா?''--புகையுடன் கேள்வியையும் சேர்த்து கக்கினான் பாராங்குசம்.

               ''எல்லாம் ஆச்சு!''--என்ற பிரபாகரனின் பதிலிலும் சோகம் தளுதளுத்தது.

               ''அப்ப ஏண்டா உம்முன்னு இருக்கே? போன இடத்திலே யாரும் சான்ஸு தரலேன்னு வருத்தமா?''--

               கேள்வியுடன் புகையையும் சேர்த்து கக்கினான் பாராங்குசம்.

                பிரபாகரன் தான் பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆர்வக் கோளாறுடன் பெரியகுளத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்தவன்.இங்கே அவனது ஊர்கார நண்பன் பாராங்குசத்துடன் அவனது அறையையே ஷேர் பண்ணித்தங்கி சினிமா சான்ஸுக்காக அலைந்து கொண்டிருக்கிறான்.

                 தினமும் படக் கம்பெனிகளின் படியேறி இறங்குவதும் இயக்குநர்களின் அலுவலகப் படியேறி இறங்குவதுமே அவனது தினசரி அலுவல் என்றாலும் யாரும் இதுவரை அவனை மதித்து ஒரு சின்ன வேஷம்கூட தந்தபாடில்லை.

        அதைத்தான் பாராங்குசம் அப்படிக் கேட்டான்.

         ''ம்ம்ம்..!அதுவல்ல என் வேதனை.எனக்கு யாரும் சான்ஸ் தரவில்லை என்று என்னிக்குமே நான் வருத்தப்பட்டதுகூட இல்லை.!''--என்று அலட்சியமாக வசனம் பேசினான் பிரபாகரன்.

                  பாராங்குசம் சிகரட் புகையுடன் தன் கேள்வியையும் சேர்த்துக் கக்கினான்,''அப்போ ஏன்தான் இப்படி  இடிஞ்சிபோய் சோகமா இருக்கே?''

                  பிரபாகரன் சொன்னான்,

                  ''என் சோகத்துக்குக் காரணம் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதல்ல; இந்த தமிழ் கூறும்  நல்லுலகமும் திரை உலகமும் ஒரு நல்ல கலைஞனை இழந்துகொண்டிருக்கிறதே என்பதுதான் என் தாள முடியாத துக்கத்திற்குக் காரணம்!''

                  'நல்ல கலைஞனை....இழக்கிறதா?யார் அந்த கலைஞன்?''

                  வாயில் தொத்திக் கொண்டிருந்த சிகரட்டை எடுக்கவும் மறந்தபடி கேட்டான் பாராங்குசம்.

                  அலட்சியமாகப் பதில் சொன்னான் பிரபாகரன்,   ''ஈடு இணையற்ற அந்தக் கலைஞன் வேறு யார்? நான்தான்...நானேதான்!''

                  இதைக் கேட்டதும் பாராங்குசத்தின் வாயில் இருந்து குப்குப்பென வெளியே வந்து கொண்டிருந்த புகை சக்கென நின்று மீண்டும் பின் வாங்கி அவனது வாய்க்குள்ளேயே நுழைந்தது.ஆம்---

                  அதிர்ச்சி பாராங்குசத்திற்கு மட்டும் அல்ல....அந்த சிகரட்டு புகைக்கும் கூடத்தான்!

1 comment:

  1. பிரபாகரன்... தன்னை அறிந்தவன்!!

    கதை அருமை.

    ReplyDelete