இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

சுதந்திரம்

          தெற்குமாசி வீதியில் உள்ள அந்த வீடு பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. அதன் கதவுகள் திறக்கப் பட்டே ஆண்டுகள் பல ஆகியிருக்கும். பங்காளிச் சண்டையால் வீட்டின் பங்கீட்டு உரிமை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கறது. வாய்தாக்களைத் தாண்டி தீர்ப்பாகும் வரை அந்த வீட்டின் நிலை இப்படித்தான் இருக்கும்.

          அது அந்தக்கிழட்டுத் தம்பதிகளுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. கடந்த சில ஆண்டுகளாக அவர்களது நிரந்தரக் குடியிருப்பே அந்தப் பழங்கால வீட்டுத் திண்ணைதான்.

         பக்கத்தில் இரண்டு கடை தள்ளி ஒரு சந்து. அந்த சந்து முனையிலேயே கார்பரேஷன் குழாய். அந்தத் தெருவில் எல்லார் வீட்டிலும் கார்பரேஷன் குழாயும்- போரும் இருப்பதால் இந்தக் குழாய்த் தண்ணீர் முழுக்கமுழுக்க அந்த முதிய தம்பதிகளுக்கே சொந்தம். வேறென்ன வேண்டும்?

        கொஞ்ச தூரம் நடந்தால் ‘’சென்னா தவ்ரோ’’- என்று அழைக்கப்படும் திருவாலவாயான் திருக்கோவில். இது மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பாத்தியப் பட்ட சிறிய கோவில். எனவே, காலையிலும் மாலையிலும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

        இந்தக் கோவில் வாசல்தான் அந்த முதிய தம்பதிகளின் அலுவலகம்.

        காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கோவில் வாசலில் இருவரும் எதிரெதிரே அமர்ந்துகொண்டு- கிழவர் தம்எதிரே தம் மேல் துண்டை விரித்துப் போட்டுக் கொள்வார். அந்தக் கிழவியோ தன் முன்னால் ஒரு வாயகன்ற அலுமினியப் பாத்திரத்தை வைத்துக் கொள்வார். கோவிலுக்கு வரும் பக்தர்களில் அதிகப்படி புண்ணியம் தேவைப்படுவோர் அந்தத் துண்டிலும் இந்தப் பாத்திரத்திலும் தத்தம் வசதிக்கேற்ப ஒருரூபாயோ இரண்டு ரூபாயோ தானமாகப் போட்டுத் தங்களுக்குத் தேவையான புண்ணியத்திற்கு முதலீடு செய்து கொள்வர்.

       காலை பன்னிரண்டு மணிக்கு கோவில் மூடும்முன் இருவருக்கும் கணிசமான ஒரு தொகை சேர்ந்திருக்கும். இடையில் ஒரு ஒன்பது மணிக்குமேல் கூட்டம் கொஞ்சம் குறையும் நேரத்தில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக பக்கத்தில் உள்ள நவபத்கானா கோட்டுத் தெருவில் இட்லி விற்கும் ஆயாவிடம் ஆளுக்கு நாலு இட்லி,சட்னிசாம்பா    ருடன் காலை உணவையும் தங்கள் வருமானத்தில் முடித்துக் கொள்வர்.

        மதியம் பிரச்சினை இல்லை.தெற்குமாசி வீதியில் நிறைய சந்துகள்;அதில் நிறைய வீடுகள்.கேட்கவேண்டுமா? ஒவ்வொரு சந்திலும் உள்ள வீடுகள் முன் நின்று சில வீடுகளில்,’’அம்மா,தாயே, கொஞ்சம் சோறு போடும்மா’’—என்று யாசிப்பதும், ஸௌராஷ்ட்ரர்களின் வீடுகளாக இருந்தால்,’’பெய், ருவ்வொ பாத்தவோ பெய்!’’- என்று அவர்கள் மொழிகளில் பிச்சை கேட்பதுமாய் ஒரு பத்து வீடுகளின் முன் நின்றால் போதும் இருவருக்கும் தேவையான மதிய உணவு கிடைத்துவிடும்.

         இப்படித்தான் இவர்களது காலம் தங்குத் தடை யின்றி சுகமாகப் போய்க்கொண்டிருந்தது.

         அந்தக் கிழவருக்கு எண்பத்தைந்து வயதிருக்கும். பாட்டிக்கு எண்பது வயதைத்தாண்டியிருக்கலாம்.

         இந்நிலையில்தான் ஒருநாள் ----

        ஒரு புண்ணியவதி தன் பாட்டியின் நினைவாய் ‘அனாதை முதியோர் இல்லம்’ கட்டி அது குறித்து பத்திரிகைகளில் செய்தியும் வெளியிடச் செய்தார். அத்துடன் தானே வீதிவீதியாய் அலைந்து அனாதைகளாக பிச்சை எடுத்துத் திரியும் முதியோர்களையும் தேடிப் பிடித்து அழைத்து வந்து அவர்களையும் பேணிப் பாதுகாக்க முடிவு செய்தார். இந்த நிலையில்தான் அவரது கண்ணில் முதலில் பட்டவர்கள் இந்த வயது முதிர்ந்த தம்பதியர். அவர்களிடம் நயமாகப் பேசித் தம்முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்தார். தேனூரில் பெரிய தென்னந்தோப்பு போல் இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது அந்த முதியோர் இல்லம். இதுவரை நான்கு பேர்தான் சேர்ந்திருந்தனர்.இவர்களைச் சேர்த்து அறுவராயினர். எப்படியும் ஒரு முப்பது பேர்களையாவது சேர்த்துக் கொள்வதென இலக்கு வைத்திருந்தனர்.

         ஜிலுஜிலு காற்று—கட்டிடத்தைச் சுற்றிக் கண்ணிற்குக் குளிர்ச்சியாகப் பல வண்ண மலர்ச் செடிகொடிகள், மரங்கள்...ஒரு பெரியஹாலில் வரிசையாக கட்டில்கள்-மெத்தை,தலையணைகளுடன்.பக்கத்திலேயே ஒரு ஸ்டீல் பெட்டி-துணிமணி சாமான்களை வைத்துக் கொள்ள.போதாததற்குப் பொழுது போக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி.காலையில் எட்டு மணிக் கெல்லாம் டிபன்-காபி, மதியம் இரண்டு காய்கறிகளுடன் சாப்பாடு-இரவு டிபன்.

        அந்தப்பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வந்த புதிதில் நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.யாரிடமும் கை நீட்டி யாசிக்காமல் வேளாவேளைக்குச் சுடச்சுட உணவு உண்டு டிவி பார்த்து கட்டிலில் படுத்து...சுகமாகத்தான் இருந்தது.

         இந்தச் சுகமெல்லாம் ஒரு இரண்டு நாள்களுக்கு மட்டும்தான். அதன் பின் ---

        ஒரே போர்! ஏதோ சிறையில் அடைத்து வைத்தது போன்ற உணர்வு. வெளியே தெருவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த சுகம் பறிபோனது போன்ற மனஉளைச்சல்
.
         இரண்டு நாள்களுக்குமேல் அவர்களால் அங்கே தங்க முடியவில்லை. மூன்றாம் நாள் மாலையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் இருவரும் பஸ் ஏறினர். கீழ வாசல் வந்து இறங்கி தெற்குமாசி வீதியின் அந்தப் பழைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சுதந்திரக் காற்றைச்  சுவாசித்த பின்தான் அவர்களது மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. நாளை முதல் காலையில் ‘சென்னாதவ்ரா’ கோவில் வாசலில் உட்கார வேண்டும். இதை---

        நினைக்கும் போதே அவர்களது உள்ளத்தில் நிம்மதி நிறைந்தது.

         சுதந்திரம்---சுதந்திரம்தான்!

        இது அவர்களின் தத்துவம் – மாற்ற முடியாத வேதத்தத்துவம்.

No comments:

Post a Comment