இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Friday 20 June 2014

இக்கரையும் அக்கரையும் - அக்கரைப் பச்சை


            எரிச்சலோ எரிச்சல்... அப்படி ஒரு எரிச்சல்.... இருக்காதா பின்னே...? இளமை துள்ளும் என் உள்ளத்தில் இன்னமும் என் பால்ய நினைவுகள் திரை ஓவியமாய் நிழலாடுகிறதே. கிட்டி புள் விளையாடியது,  பம்பரத்தை சுழன்று விட்டு ஆடியது, அதற்காக வண்ணவண்ண பம்பரங்களையும் அழகழகான குஞ்சம் வைத்த சாட்டைகளையும் எத்தனை வாங்கி இருப்பேன். அட , அந்த கோலி விளையாட்டைத் தான் மறக்க முடியுமா?     


            இவ்வற்றையும் தாண்டி இளமையைத் தொட்ட கணம் தொட்டு நண்பர்களுடன்  ஊர் சுற்றி . திரை அரங்குகளில் விஜயம் செய்து, மைதானத்தில் கபடி விளையாடியதென்ன.. கால் பந்தாட்டம விளையாடியதென்ன.. ஆஹா எத்தனை இன்பம்!!


            இவை எல்லாமே இக்கணம் வரை சற்றும் மங்காமல் மழுங்காமல் நெஞ்சுத்திரையில் 3D ஓவியமாய் நிழலாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டால் எரிச்சல் வராதா என்ன?


            அன்று..


            என் மனைவி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள். எனக்கு கொஞ்சம் (கொஞ்சமாவது கொஞ்சம்.... ரொம்பவே)  ஆஸ்த்மா..... மூச்சிறைப்பும், உடல் பலஹீனமும் சேர்ந்து என்னைக் கொஞ்சம் தள்ளாட வைத்து விட்டது. பரிசோதித்த மருத்துவரும் மருந்து மாத்திரைகளை முழநீளத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டு - அப்படியே சத்து ஊசிப் போட்டுட்டுப் போங்க என்று கூறிவிட்டார்.


            அந்த நர்ஸ் என் மனைவியிடம், 'தாத்தா பேர் என்ன?' என்று கேட்டு விட்டு 'தாத்தாவை இங்கே இப்படி உட்கார வைங்க, இந்த ஊசியை இடுப்பிலே போடனும்! ' என்று நொடிக்கு ஒரு தாத்தா போட்டு என்னை எரிச்சலில் எரிய விட்டாள்.


            இளமையின் துள்ளலை இன்னமும் நழுவவிடாத என் உள்ளம் அந்த 'தாத்தா'  என்ற சொல்லையே ஜென்ம விரோதியின் பெயராக பாவிக்க வைத்தது.          


            இதோடு முடிகிறதா இந்த அவலம்!


            முன்னெல்லாம் நான் பஸ்ஸில் ஏறினால் காலியாக இருக்கும் இருக்கையில் போய் ஜம்மென்று அமர்ந்து பயணச்சுவையை மிகவும் ரசித்த படி பயணிப்பேன். அந்த நேரம் பார்த்து ஒரு கிழவர் தட்டுத் தடுமாறி ஏறி நேராக என் இருக்கை அருகில் நின்று தள்ளாட்டம் ஆடத் தொடங்க... பஸ்ஸில் உள்ள அனைவரும் என்னையே பார்க்க... முறைக்க.... நானும் மனிதாபிமானத்தால் என்று கூற முடியாவிட்டாலும், நாகரிகம் கருதி வேண்டா வெறுப்பாக எழுந்து அந்த கிழவர் உட்கார இடம் அளித்து நின்றபடி பயணிப்பேன்.

           
            அந்த காலம் இப்போது எங்கிருக்கிறது!!

            பாருங்களேன், அன்றொரு நாள் பஸ்ஸில் ஏறினேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். நிரம்பி வழிந்த பேருந்தில் எங்கும் உட்கார இருக்கை இல்லை. சரி பராவாயில்லை. நின்றே பயணிப்போம் - என்று முடிவெடுத்து நின்றிருக்கும் போது.....


            அடசட்!


            பின்னால் இருந்து ஒரு குரல். அதுவும் தேனினுமினிய பெண்குரல், 'தாத்தா, இப்படி வந்து உட்காருங்க' - என்றதும் திரும்பிப் பார்த்தேன். அங்கிருந்த இருக்கையில் தன் தோழியுடன் (சகோதரி !) அமர்ந்திருந்த ஒரு இளம் பெண் எழுந்து நின்ற எனக்கு இடம் அளிக்க முன்வர அவள் அருகில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணும் சிறிதும் தயங்காமல் , 'வாங்க தாத்தா! வந்து உட்காருங்க என்று வரவேற்புரை வாசிக்க எனக்கு எரிச்சலொ எரிச்சல்.


            தாத்தா... தாத்தா... தாத்தா... தாத்தா...


            என்னைக் கிழவனாக்கி விட்டார்களே!


            முதுமை எனக்கு எரிச்சலூட்டிக் கொண்டிருக்க என் அருமை இளமை காலத்தின் இனிய நினைவுகளை என் எண்ண கரங்களால் தேடித் துழாவிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும்.


            'தாத்தா... தாத்தா... '


            இப்படி அழைத்துக் கொண்டே வந்தவன் என் அருமைப் பேரன்.


            'என்னப்பா பிரபா! எங்கே போய் சுத்திட்டு வர்ரே!'  உள்ளத்தில் பொங்கிய பொறாமை உணர்வை மூடி மறைத்தப்படி என் பேரன் முன் கேள்வியை நீட்டினேன்.


            ரொம்பவே அலுத்துக் கொண்டான் அவன்.


            'அட போங்க தாத்தா! இப்பல்லாம் உங்க மாதிரி சீனியர் சிடிசன்களுக்கு இருக்கிற மதிப்பும் மரியாதையும் தனிதான்! அதிலே ஒரு விழுக்காடு கூட என் போன்ற இளைஞர்களுக்கு இல்லே! ' என்ற அவனது கூற்று என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் எண்ணத்திற்கு மாறான எதிர் கருத்தல்லவா அவனது இளம் உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருக்கிறது.


            என்ன காரணம்? அறிய ஆவல் கொண்டேன்.


            பேரனிடம் கேட்டேன் அவன் சென்னான். தாத்தா இப்பல்லாம் எங்களுக்கு கல்லூரியிலேயே நாங்கள் கேட்கிற கோர்ஸ் கிடைக்கிறதில்லே!. அவங்க எந்த கோர்ஸ்லே சேர்க்கிறாங்களோ அதைத் தான் நாங்க படிக்கணும்


      ஆனா எதைப் படிச்சாலும் வேலை மட்டும் கிடைச்ச பாடில்லே. அரசு அலுவலகங்களில் 80 பேர் ஓய்வு பெற்றால் எட்டு பேரைக் கூட அந்த இடங்களில் எடுப்பதில்லை. எனவே, அரசு ஊளியர்களின் பணிச்சுமைகளில் இருந்து அரசுப்பணி ஆமை வேகம் ஆகிறது.


      அந்த அரசு ஊழியர்கள் காலி இடத்தை நிரப்பச் சொல்லி உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தால் உடனே அரசு எங்களை தொகுப்பூதிய பணிக்கு அழைத்து வெறும் ஐயாயிரம் ரூபாய் மட்டும் தருகிறது.


      ஆசிரியர் பணிக்கு முயற்சித்தாலோ அரசு அதற்கும் ஒரு தேர்வு வைத்து தேர்ச்சி பெறுவோர் மூண்றாண்டுக்குள் பணியில் அமர வேண்டும். இல்லையெனில் மீண்டும் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அடுத்த மூன்றாண்டு --- என்று தேர்விலேயே எங்களை ஐம்பத்தெட்டு வயதாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.


      தொழிற்கல்வி கற்று சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடன் கேட்டால் அடமானமாக சொத்து இருக்கிறதா என்று கேட்கிறார்கள்!


      'தாத்தா! எப்படிப் பார்த்தாலும் இளைஞர் உலகைச் சுற்றி ஒரு பேரிருள் படர்ந்திருக்கிறது. அந்த இருள் மறைய பேரொளி ஒன்று பிறக்க வேண்டும். பிறக்குமா?


      - பேரனின் பேச்சும் கேள்வியும் தாத்தாவை வாயடைக்க வைத்தன!


                        உண்மை தானே!

No comments:

Post a Comment