இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

முதிர்ந்த காதல்

        இன்று—

        மே28-ஆம்  நாள். ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று கருவூலத்தில் வாழ்வுச் சான்று (Mustered) கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக எண்ணிக் கொண்டிருந்தேன். முதுமையின் ஏலாமை காரணமாக நாள்கள் தள்ளிப் போய்க்கொண்டிருக்க இன்றுதான் கிளம்பினேன். பொனேனா?

       அங்கே சொல்லிமாளாத கூட்டம். 

அறுபது..எழுபது..என்பது..தொண்ணூறு...ஆண்டுகளின் ஏராளமானப் படிகளைக் கடந்தவர்கள் கூட்டம். உடல் நடுங்க நடப்பவர், தள்ளாடியபடி மருமகளின் கரம் பற்றியபடி அன்னநடை போடுபவர், விழியின் ஒளியைப் பறிகொடுத்து மகனின் உதவியால் வருபவர்—என்று இப்படி எத்தனை வகை சீனியர் சிட்டிசன்ஸ்.......!

      இந்தாண்டு ஒவ்வொருவரையும் கணிணி புகைப்படக் கருவி தொடர்பின் மூலம் புகைப்படம் எடுத்தபின் ஓய்வூதியப் பதிவேட்டில் சீலிட்டு கையொப்பம் இட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

       வரிசையில் அமர்ந்து ஒவ்வொரு முதியவர்களையும் கண்ணோட்டமிட்டவாறும் முதுமை அழகை ரசித்தபடியும், சில முதுமை தள்ளாமை கண்டு மனம் தவித்தவாறும் இருந்த போதுதான் அவளைப் பார்த்தேன்!

         பரிமளாராணி!

        ‘’அவள்தானா—இவள்’’-என்ற சந்தேகம் ஒருபுரம் இருந்தாலும் ‘அவளேதான்’-என்று என் உள்மனம் ஓலமிட்டுக் கொண்டிருந்தது!

        காலம் சிலரது அழகை மெருகேற்றி மேம்படச்செய்கிறது. சிலரது அழகை அழித்து மாறுபடச் செய்கிறது. இதில்—

        பரிமளாராணி இரண்டாவது வகையினளாக இருந்த்துதான் என் மனவேதனைக்குக் காரணம். ஆம்—

        நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் என் வகுப்பில் படித்த பரிமளராணி கல்லூரியின் அழகுராணியாக பவனிவரும்போது அவளது அடிச்சுவட்டின் பின்னாலேயே அடி எடுத்து வைத்த பல மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைவிட—நான் அவளின் தீவிரமான காதல் தீவிரவாதி என்றே சொல்ல வேண்டும்.

                    நான் ஒன்றும் அப்படிப் பிரமாதமான அழகனல்ல; குரூபியுமல்லன் –சுமார் ரகம்தான்! என்றாலும் என் மனமெல்லாம் பரிமளாராணி நிரம்பி வழிந்து கொண்டிருந்தாள். என் இமை திறந்திருக்கும் நேரமெல்லாம் பரிமளாராணி என் முன் நின்று கொண்டிருக்க வேண்டும்; என் இமை மூடியிருக்கும் பொழுதெல்லாம் பரிமளாராணி என் கனவு ராணியாக இமைக்குள் பவனி வந்து கொண்டிருக்கவேண்டும்.-என்றெல்லாம் பேராசைப் பேய்பிடித்து அலைந்துகொண்டிருந்த காலம்! ஆனால்—

          அவளது மனதைப் புரிந்து கொள்வதுதான் கஷ்டமாக இருந்தது ஒரு நாள் அவளே வலிய வந்து இனிக்க இனிக்கப் பேசி என்னை இன்பப்புரியில் உலவ விடுவாள்—அடுத்த நாளே நானிருக்கும் பக்கம் கூடத் திரும்ப மாட்டாள்!

           அவள் மனதில் நான் இருக்கிறேனா இல்லையா?

           --என்று தெரியாமல் அல்லாடி—நேரடியாக கேட்கத் தைரியமின்றி ராத்தூக்கம் தொலைத்து –அந்த காலக் கட்டங்களில் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே—அது சொல்லி மாளாது!

            அந்தப் பரிமளாராணிதானா இவள்--!

            நம்பமுடியவில்லை; ஆனால் உண்மையை நம்பித்தானே ஆகவேண்டும்!

            எனக்கு மூன்று பேர் தள்ளி முன்னால் நின்று கொண்டிருந்த அந்த எழுபது வயது மாஜி ‘கனவுக் கன்னி’ பரிமளாராணியையே நான் வைத்தகண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி அவளைச் சற்றுத் தொலைவில் இருந்து பார்ப்பதிலும் இந்த எழுபத்துமூன்று வயதிலும் மனதில் ஒரு பரவசஅலை எழத்தான் செய்த்து!

          காதல் என்ன அவ்வளவு சுவையானதா? காலம் கடந்த கைக்கெட்டாக் காதலும் மனதில் மன்மத லீலையைப் பாட வைக்கிறதே!

          சட்!

          எதற்கோ திரும்பிய பரிமளாராணி என்னைப் பார்த்து விட்டாள். பார்த்ததும்—

           பரிமளாராணி என்னை அடையாளம் கன்டுவிட்டவளாக முகம் மலர,’’நீங்கள்.......நீங்கள்......’’—என்று சொல் தடுமாற நானும் பூத்த புன்னகை குன்றா முறுவலுடன்’’ஆம்!..நான்..ந1னேதான்!’’—என்று கூறியதும் அந்த எழுபது வயது மாஜி அழகு கலகல என்று சிரித்தபடி,’’அந்தப் பழைய குறும்புப் பேச்சு அப்படியே இருக்கிறதே உங்களிடம்!’’—என்று கூறியவள் அடுத்து செய்த செயல் என்னை மேலும் பரவசப் படுத்தியது!

             “எக்ஸ்கியூஸ் மீ!’’—என்று தன் பின்னே இருந்த இருவரிடமும் கூறிவிட்டு—எனக்கே எனக்காகத் தன் முன் இருக்கையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து பின்னே வந்து எனக்கு முன்னே நின்றாள்!

           எனக்காக—எனக்கே எனக்காக!

           ‘’எப்படி இருக்கீங்க பரிமளம்?’’-என்று நான் குசலம் விசாரித்ததும், ‘’ப்ச்!’’-கொட்டியவளாய்,’’ஏதோ இருக்கேன்!ரெண்டு பசங்க, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஊரில்! இங்கே நான் தனியா வாழ்க்கையே போரடிச்சி அதோடு போராடிக் கிட்டிருக்கேன்!’’—அன்று போலவே அழகாக நயம்படப் பேசினாள் பரிமளாராணி!

         ‘’உங்க வீட்டுக்காரர்?’’-என்று கேன்வியாய் வளைத்து அவள் முன் நீட்டியதும்—

          ‘’போயிட்டார்! அரசு ஊழியரா முப்பது வருஷம் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆகி- மொத மாச பென்ஷன்கூட கையிலே வாங்கிப் பார்க்கிற கொடுப்பினே இல்லாம-அஞ்சு வருஷத்துக்கு முன்னே நெஞ்சுவலின்னு படுத்தவர் கடைசிவரை எழுந்திருக்கவே இல்லே! அதுவே அவரது கடைசிப் படுக்கையாயிடுச்சி!அவர் மூலமா கிடைச்ச குடும்பப் பென்ஷனுக்கான மஸ்டர்ட்டுக்காகத்தான் நான் இங்கே வந்து நிக்கிறேன்! நீங்க?’’

          ‘’நானும் ஓய்வு பெற்ற அரசு ஊழியன்தான்!அதனாலேதான் இந்த கியூவில் நிற்கிறேன்! எனக்கு ரெண்டு மகள்-ஒருத்தி கணவரோட  சென்னை வாசம்! இன்னொருத்தி ஜெர்மனியில் கணவரோட இருக்கா! இங்கே நான் வாழ்க்கையோட போராடாமலும்—போரடிக்காமலும்-என் மனைவியின் துணையோட நாள்களை எண்ணிக்கிட்டிருக்கேன்!’’

         ஏதோ யோசித்தவளய் பரிமளாராணி கேட்டாள்,’’நாம படிப்பை முடிச்சி பிரிஞ்ச இத்தனை வருஷத்திலே என்னைக்காவது நீங்க என்னைப் பத்தி நெனைச்சிருக்கீங்களா?’’

          அணுகுண்டாய் வந்து விழுந்த்து கேள்வி! உண்மையிலேயே நான் பலமுறை பரிமளாராணியைப் பற்றி நினைத்து கொஞ்சம் கற்பனை உலகில் ஜாலி உலா வருவதுண்டுதான்! ஆனால் இதையெல்லாம் போய் இந்த வயசில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா! ஏதோ ஒரு ஈகோ உண்மைக்கும் எனக்கும் இடையில் நின்று மறைக்க,

         ‘’இல்லே!இப்போ பார்த்த பின்தான் உன் நினைவே வந்த்து!’’
          அப்பட்டமாகச் சொன்னேன் ஒரு பொய்யை!
          நெடுமூச்சு விட்டாள் (என்)பரிமளாராணி!
          அந்தப் பெருமூச்சே என்னைப் பேதலிக்க வைத்த்து!

          ஆனா, நான் உங்களை அடிக்கடி நினைச்சிக்குவேன்! பக்கத்தில் கணவர் படுத்திருந்த போதும்—தப்புதான்—நான் கனவில் உங்களுடன் உலா வந்த நாள்கள் பல! நம் கல்லூரிக் காலத்திலேயே என் மனம் உங்களை நாடியது உண்மைதான்! ஆனால் அது எந்த அளவிற்கு விரும்பியது என்பதை என் திருமணத்திற்குப் பின் தான் உணர்ந்தேன்! இதனால்தான் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்களோ!’’-என்று மனம் திறந்து பேசினாள் பரிமளாராணி.

       என் மனம் கலங்கியது—பேதலித்த்து!

       அந்தக்கால என் உள்ளக் கிடக்கைகளை எல்லாம் இப்போதே அவள் முன் கொட்டி விடலாமா என்ற துடிப்பு என் அடிமனதில் எழுந்த கணமே ஏதோ ஒன்று என்னைத் தடுத்த்து1 அது—எது? அது என் ஆண் மனமா?அல்லது என் மனைவியின் அன்புக் கரமா?

       ஆனாலும்—

      காதல் நிறைவேறாமல் போனாலும்—அந்தக் காதல் நினைவுகள் காலமெல்லாம் நெஞ்சில் நிறைந்து ஒருவித சுகபோதையை ஊட்டத்தான் செய்கின்றன.

     வரிசை நகர வாழ்வுச் சான்று கையெழுத்தாகி பிரியும் போது—

     நான் பார்த்தேன்—
     பரிமளாராணியின்  கண்களில் ஏக்கம்--!
     நான் உணர்ந்தேன்---
     என் உள்ளத்தில் துக்கம்!
     எத்தனை வயதானால்தான் என்ன?—

     காதல் –காதல்தான்!

1 comment:

  1. எத்தனை வயதானால் தான் என்ன?
    காதல் காதல் தான்.

    அருமை. அருமை ஐயா.

    ReplyDelete