இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Thursday 19 June 2014

மாரகம்

            எழுபத்து நான்கு வயதைத் தாண்டியதும் சாரங்கன் மனதில் ஒருவித பயம் கவ்விக் பெண்கள்.இருவருக்கும் திருமணமாகி மூத்தவள் சென்னையிலும் இளையவள் ஜெர்மனியிலும் இருக்கின்றனர்.

            சாரங்கன் தன் மனைவி சியாமளாவுடன் மதுரையில் காலத்தை ஓட்டுகிறான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியத்தில் கஷ்டப்படாமல் காலத்தை ஓட்டினாலும் - இளமையில் அவர் ஆடிய ஆட்டம் இன்று மாரடைப்பிலும்-ஆஸ்மாவிலும் கொண்டு வந்து விட்டது.மூன்று முறை ICU வில் குடியிருந்து தப்பி பிழைத்து வந்தாலும் மாதம் தோறும் சுமார் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல் மருந்துகள் வாங்கி தினமும் தவறாமல் கைநிறைய மாத்திரைகளைச் சாப்பிட்டு (விழுங்கிக்)காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.இந்நிலையில்
அவரது பயம் என்ன வென்றால்-தான் இறந்து விட்டால் தனித்து விடப்படும் தன் மனைவி யின் கதி என்னாவது? குடும்பப் பென்ஷன் கிடைத்தாலும் அவளுக்கு வீட்டையும் கணவனை யும் தவிர வெளியுலகம் தெரியாது.ஒரு கரண்டு பில்கட்ட,வீட்டுவரி கட்ட,வங்கிக்கு சென்று வர-ஊஹும்-எதுவும் தெரியாது.பாவம், தத்தளித்து விடுவாளே! இந்தக் கவலையால்தான் சாரங்கன் கொஞ்ச நாளாய் தான் போகும் இடம் எல்லாம் அவளையும் அழைத்துச் சென்று வங்கி,மின்கட்டண விவகாரம் என்று ஒவ்வொன்றாய் பழக்கி வந்தாலும் அவனது பயம் நீங்கிய பாடில்லை.ஏனெனில் இவர்கள் வீட்டில் தனித் தல்லவா வாழ்ந்து வருகின்றனர்.

             திடீர் என்று ஒர் இரவில் தான் இறந்து விட்டால் அவள் விடியும் வரை....... நினைத்துப் பார்க்கும் போதே சாரங்கனுக்கு கவலையாகத்தான் இருந்தது.நள்ளிரவில் எந்த சொந்த-பந்தம் துணைக்கு வரும்.--அதுவும் நகரத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும் அவர்கள் வீட்டுக்கு! சியாமளாவின் சொந்த ஊர் சென்னை.அவளுடைய உடன் பிறப்புகளும் சொந்த பந்தங்களும் வாழ்வதும் சென்னையில்தான்.எனவே அவர்களுடைய உதவியையும் உடனடியாக எதிர்கொள்ள முடியாது.இது சாரங்கனின் ஒரு பக்கக் கவலை என்றால் இன்னொ ருபக்கமும் உண்டு.சர்க்கரை நோயாளியான அவனது மனைவி அவனுக்கு முன்னே காலமாகி விட்டால் அவனது கதி என்ன? தனியே அவனால் வாழ முடிந்தாலும் உணவுக்கு வழி.....? அவன் வாழும் புறநகர் பகுதியில் எந்த ஒரு உணவு விடுதியும் இல்லை.அதிக பட்சம் ஒரு டீக்கடை மட்டும் உண்டு.அங்கே மூன்று வேளையும் வடையும் டீயுமாய்த் தின்றா வாழ முடியும்? இல்லை..ஒவ்வொரு வேளையும் பஸ் ஏறி டவுனுக்குச் சென்று சாப்பிட்டுத்தான் வர முடியுமா?

            ஒரு மகன் மட்டும் பிறந்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் எதுவும் வந்திராது.உரிமையுடன் மகன் வீட்டில் ராஜா போல் அதிகாரம் செய்து கொண்டுஆளுகை புரியலாம்.ஆனால் மகள் வீட்டில் அப்படி முடியுமா?என்னதான் இந்த காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் படித்து வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தாலும் அவளும் கணவனுக்குக் கட்டுப் பட்டுதானே வாழ வேண்டியிருக்கிறது.அவர்களது வீட்டைப் பொறுத்த வரை சாரங்கன் வெறும் விருந்தினாகத்தானே கருதப்படுவான்.எனவே---

             மகன்---மகன்தான்

            மகள்---மகள்தான்

             இந்த இயற்கை நியதி எந்த ஒரு காலத்தாலும் மாற்ற முடியவே முடியாது! நீங்கள் சொல்லலாம் இப்போதெல்லாம் வசதியான முதியோர் இல்லங்கள் இருக்கின்றனவே என்று!என்றாலும் தன் வீட்டில் இருப்பது போல் வருமா? அத்துடன் அவரது மகள்களும் தடுத்துத் தங்களுடன் வந்திருக்குமாறு கூறத்தான் செய்வார்கள்.ஆனாலும் சாரங்கன் அதை கௌரவக் குறைச்சலாகத்தான் கருதுகிறான்.
பின் இதற்கு என்னதான் வழி

            ஒரே வழி......!

           அந்த எமதர்மராஜன் இவர்கள் மீது கருணை கொண்டு இருவரையும் ஒரே சமயத்தில் அழைத்துச் செல்வதுதான் அந்த வழி!ஆனால் இது போன்று நடக்கவே முடியாத அசட்டுத்தனமான கற்பனைகளில் காலத்தை வீணாக்காமல் சரியான வழியை ஆராய விரும்பினான் சாரங்கன்.அதற்கு முன் முதலில் யாருக்கு சாவு வரும் என்பதைக் கண்டறிய வேண்டும். இது முடியுமா?

           நல்ல சோதிடர் கிடைத்து அவர் மனம் வைத்து இருவர் ஜாதகங்களையும் துல்லியமாக அலசி ஆராய்ந்து யார் யாருக்கு மாரகம் எப்போதெப்போது வரும் என்று கணித்துச் சொன்னால் ஒரு வேளை முடியலாம்.அதற்கு----- நம்பிக்கையான சோதிடர் வேண்டும் என்பது மட்டும் அல்ல--அவர் மாரகத்தைக் கணித்தறிந்து சொல்லவும் வேண்டம்! சாஸ்திரப்படி அப்படி கணிக்கக் கூடாது என்பார்கள். எனவே எந்த ஒரு சோதிடரும் அதைச் சொல்வதில்லை.

         இந்த நிலையில்தான் தன் நெருங்கிய நண்பரும் சோதிடக்கலையில் வல்லவருமான ராஜாராமிடம் சென்று கேட்பது என்று முடிவு செய்து அவரிடம் விலாவாரி யாக கைப்பேசியில் சொல்லி முதலில் மறுத்தவரையும் தன் சொல்சாதுரியத்தால் சம்மதிக்க வும் வைத்து விட்டார்.இதோ சற்று நேரத்தில் தன் மனைவியுடன் ராஜாராம் வீட்டிற்குக் கிளம்ப இருக்கிறார்.
தனக்கு வாடிக்கையான ஆட்டோ டிரைவர் நாகராஜனுக்குப் போன் செய்து வரவழைத்து மனைவியுடன் ஆட்டோவில் ஏறி வில்லாபுரத்திற்குப் புறப்பட்டார்.

         மாலைநேர டிராபிக்கில் ஆட்டோ ஆங்காங்கே நின்று நகர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி பாலத்தில் ஏறி பாதிப்பாலத்தைக் கடந்த நிலையில்--- எதிரே அதிவேகமாக கண்மண் தெரியாமல் ஏதோ ஏரோப்பிளேன் போல் பாய்ந்து வந்த லாரி ஆட்டோவை நெருங்க—டிரைவர் நாகராஜனும் சாதுரியமாய் லாரியிடமிருந்து தப்ப முயற்சிக்க ---- ஹஹ்ஹஹ்ஹா--- -----என்று காலன் சிரித்தான்----கர்ஜித்தான்.

           டமால்!

          லாரியும் ஆட்டோவும் மோத அங்கே ஒரு வேடிக்கை பாருங்கள்---
டிரைவர் நாகராஜன் பலத்த காயத்துடன் தப்பித்துக் கொண்டார். ஆனால்---- சாரங்கனும் சியாமளாவும்தான்------ பாவம் மாரகம் அறிய ஜாதகத்துடன் பயணமானவர்களுக்கு மாரகம் வில்லாபுரம் பாலத்திலேயே நிகழ்ந்து விட்டது. அவர்கள் விரும்பியது போல் சதி-பதி இருவரும் ஒரே நேரத்தில் விண்ணகப் பயணமானார்கள்.


இறைவன் திருஉள்ளம் யாரே அறிவர்!

1 comment:

  1. மிகச் சுருக்கமான ஆயினும்
    மிக அற்புதமான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
    (நான் வில்லாபுரத்துக்காரன் என்பதால்
    கதை கூடுதலாகவே என்னைக் கவர்ந்தது )

    ReplyDelete