இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Thursday 26 June 2014

ஒரு சமாசாரம் - அத்தியாயம் - 2

          'நேத்து காந்தி வந்துருந்தாரு. மகாத்மா காந்தி தான். நானும் அவரும் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். என்ன அவருக்கு தமிழ் தெரியாது; எனக்கு இந்தி தெரியாது. ஆனாலும் பேசிக்கிட்டிருந்தோம்.  எப்படின்னு கேக்கிறீங்களா? அட அது ஒன்னும் பெரிய விஷயமில்லே. அவரு இந்தியிலே பேசினாரு - நான் தமிழ்லே பதில் சொன்னேன். அவ்வளவு தானே!.

சி.எம்.வி. பூங்காவில் நான் மெல்ல நடந்து (நடைப் பயிற்சி) வலம் வரும் போது ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ரொம்பவும் ஆர்வமாகவும் திவிரமாகவும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பாவம் , அவர் எதிரிலோ அருகிலோ  யாரும் இல்லை. அவரது பேச்சு சுவையாகப் பட்டதால் அவரது குரல் கேட்கும் தூரத்தில் நின்று அவர் பேசுவதை எல்லாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த என்னை அவர் பார்த்து விட்டார்.  உடனே --

'வாங்க சார், வாங்க, வாங்க! உங்களைத் தான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்திட்டு இருந்தேன். ஏன்னுன்னு கேக்கிறீங்களா? அது தான் சொல்லப் போறேனே, அதுக்குள்ள என்ன அவசரம்.'  ன்னு கூறிவிட்டு என்னைச் சில நெடிகள் உற்றுப் பார்த்த பின் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

           'சரி தான்! உங்களைத் தான். அவர் சொன்ன அடையாளங்கள் எல்லாம்  அப்படியே சரியா இருக்கே. நான் ஒரு பைத்தியம் யாருன்னு சொல்லாமலேயே பேசிக்கிட்டிருக்கேன் பாரு. வேற யாரும் இல்லே, நம்ம சிவாஜி கணேசன் தான். நேத்து வந்து உங்களை ரொம்ப விசாரிச்சாரு. உங்ககிட்ட கூட ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாமே, சாய்ந்தரம் வந்தா பார்க்கலாம்னு நான் சென்னேன். அவருக்கு இப்போ புதுசா நாலு படம் புக்காகி இருக்காம். அதனாலே நேரம் இல்லே. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன். அவரைப் பார்த்தா சொல்லிருங்கன்னாரு. உங்க பேரு கூட சென்னாரு. அது என்ன பேரு.....  'என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு தலையிலும் ரெண்டு தட்டு தட்டி யோசித்துவாறே,  'மறந்துட்டேன். ஆனா என்ன.. நீங்க தான்  என் முன்னாலே நிக்கிறீங்களே, உங்ககிட்டே கேட்டாப் போச்சு. அது தெரியாம பாருங்க நான் ஒரு பைத்தியமாட்டம்  யோசனெல்லாம் பண்ணிட்டிருக்கேன். ஆமா,  உங்க பேர் என்ன? - என்று கேட்டார்.

நான் பதில் கூறாமல் வெறுமே புன்னகைத்தேன். ஆனால் அவர் அதைப் பத்தி கவலைப் படவில்லை.

பேரிலே என்ன இருக்கு. ஏதோ ஒரு பேரு. நமக்கு பேரா முக்கியம் ஆளு தானே! ஆனா சிவாஜி கணேசன் உங்க பேரைக் கூடச் சொன்னாரு. நான் பைத்தியம் மறந்துட்டேன்.

இப்படியே பேசிக் கொண்டிருந்த அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எண்ணெயே  காணாத பரட்டைத் தலை. முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் கருப்பாய் அழுக்கின் பதிவுகள். ஒரு கிழிந்த கறுப்புக் கோட்டு - கோட்டுக்குள்ளே  கோடு போட்ட அழுக்குச் சட்டை - அழுக்கேறி பழுப்பாகிப் போன ஒரு நாலு முழ வேஷ்டி.

முக்கியமாக முக்கால் முகத்தை மறைத்த தாடி, மீசை. வயது ஒரு அறுபதோ எழுபதோ இருக்கும். சரியாக கணிக்க முடியவில்லை.

அவரது பேச்சு நின்றபாடில்லை. மகாத்மா காந்தியில் இருந்து சிவாஜி கணேசனுக்கு வந்தவர் இப்போது தீடீர் என்று சாயி பாபாவிடம் தாவிவிட்டார்.

புட்டபத்தி போகணும்.  நாளக்கி போய் சாயிபாபவைப் பார்த்து  'சாமி  நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்! ' - என்று அவர் பிணாத்திக் கொண்டிருந்த போது முதுகில் தட்டும் உணர்வு ஏற்படத் திரும்பினால் -

சதாசிவம் நின்று கொண்டிருந்தார். மெஜீரா கோட்ஸில் டைப்பிஸ்டாக வேலை பார்த்து ஸ்டெனோவாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். என் பால்ய நண்பர்.

'அவரைத் தெரியுமா? ' - சதாசிவம் கேட்டார்.

 'இல்லை, இப்போதான் பார்க்கிறேன்!! '

                 எனக்குத் தெரியும். ரொம்ப வருஷமாத் தெரியும். அவர் ஒரு ஓவியர்  'மன்னன் ' என்ற புனைப் பெயரில் பல பத்திரிக்கைகளிலும் புத்தக அட்டைபடங்களிலும் ஓவியம் வரைந்தவர். இப்போது இப்படி ஆகிவிட்டார்! '

சதாசிவம் சொன்ன செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது.


                     - தொடரும் - 2 -

1 comment:

  1. மன்னனின் நிலைமையே இப்படியா ?ஏன் ,ஏன் ?சீக்கிரம் சொல்லுங்க சார் !

    ReplyDelete